திருச்சி முசிறி காவிரி ஆற்றில் குளித்தபோது பலியான இருவரை, சடலமாக மீட்டுள்ள மீட்புப் படையினர், மாயமான இரு சிறுவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் முசிறி அந்தரபட்டி பகுதியில் வசிப்பவர் ஜெயலக்ஷ்மி. இவரது உறவினர்கள் கோவை மற்றும் கரூர் பகுதியில் இருந்து ஜெயலக்ஷ்மி இல்லத்திற்கு நேற்று வந்துள்ளனர். பின்னர், ஜெயலக்ஷ்மியின் உறவினர்களான கோவை தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியர் சரவணகுமார் (31), நித்திஷ்குமார் (15), சிறுவர்கள் மிதிலேஷ்(8), ரத்திஷ் (12) ஆகியோர் முசிறி பரிசல் துறை ரோட்டில் உள்ள காவிரி ஆற்றுக்குக் குளிக்கச் சென்றுள்ளனர்.
ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக புதை மணலில் சிக்கிய பேராசிரியர் சரவணகுமார், நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார். அப்போது சிறுவர்கள் ரதீஷ், மிதிலேஷ் ஆகியோரும் மாயமாகினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற முசிறி தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள், காவிரி ஆற்று தண்ணீரில் இறங்கித் தேடினர். அப்போது சரவணகுமார் உடலை சடலமாக மீட்டனர்.
தொடர்ந்து மிதிலேஷ், ரதிஷ் ஆகியோரை தேடியபோது எதிர்பாராதவிதமாக முசிறி கருமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பார்த்திபன் (12) என்ற சிறுவனின் சடலம் கிடைத்தது.
தேடிய சிறுவர்களில் சடலம் கிடைக்காமல் மேலும் ஒரு சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடையச் செய்தது. மேலும், சிறுவர்கள் இருவரையும் மீட்புப்படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். முசிறியில் தற்போது விட்டுவிட்டு மழை பெய்வதால், வீரர்கள் சிரமத்தைப் பொருட்படுத்தாமல் சிறுவர்களைத் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.