Skip to main content

பட்டாகத்தியுடன் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம்;மேலும் இருவர் கைது!

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

சென்னை அரும்பாக்கத்தில் பட்டாக்கத்திகளுடன் மோதலில் ஈடுபட்ட மேலும் 2 கல்லூரி மாணவர்களை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

சென்னை அரும்பாக்கத்தில் நேற்று பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் செல்லும் பொழுது பட்டாக்கத்தியால் மற்ற மாணவர்களை தாக்கிய சம்பவம் நடைபெற்றது. ரூட்டு தலை பிரச்சனை காரணமாக அந்த தாக்குதல் சம்பவம் நடந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே நேற்று அரும்பாக்கம் போலீசார் மதன், சுருதி என்ற அந்த இரண்டு மாணவர்களை கைது செய்திருந்த நிலையில் தற்போது அந்த சம்பவத்தில் மேலும் இரண்டு மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

 College students clash with a knife; two more arrested


செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ரவிவர்மன் அதேபோல் வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ராஜேஷ் குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்தில் இவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2 பேரிடமும் தற்போது விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இன்னும் சில மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நேற்று கைது செய்யப்பட்ட 2 மாணவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் அவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. தலைமறைவாக இருக்க கூடிய மாணவர்கள் யார் யார் என்பது தொடர்பாக தற்போது கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 

குறிப்பாக இதுபோன்ற ரவுடிச செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல்துறையினர் முடிவு செய்திருக்கிறார்கள். அது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த இணை ஆணையர் சுதாகரன் இதனை தெரிவித்திருந்தார். அதேபோல் பொதுமக்கள் கூட கூடிய இடங்களில் கத்திகளுடன் அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட மாணவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மட்டுமல்லாமல் சரித்திர பதிவேடு குற்றவாளிகள், அதாவது ரவுடிகள் பட்டியலில் இணைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

 

 College students clash with a knife; two more arrested


தற்போது 2 பேர் கைது செய்யப்பட்ட இவர்கள் மீதும் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிகிறது. நேற்று நடந்த இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த வசந்தகுமார் என்பவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. அதில் நேற்று நடந்த பிரச்சனையில் இரண்டு ரூட்டுகளை சேர்ந்த மாணவர்கள் இடையே நடந்த பிரச்சனையின் காரணமாக அதே ரூட்டில் செல்லக்கூடிய ஒரு மாணவனை சிறை பிடித்துச் சென்ற சில மாணவர்கள் அந்த மாணவனை அரை நிர்வாணமாக்கி அந்த மாணவனிடம் தங்களுடைய ரூட் தான் கெத்து என்று சொல்ல வேண்டும் எனவும், அவர் செல்ல வேண்டிய ரூட்டை இழிவுபடுத்தியும் அவர் கையில் வைத்திருக்க கூடிய நோட்டில் எழுதச் சொல்லியும் அடித்து துன்புறுத்தி அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். இதுகுறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்