பெரிய நகரம் தொட்டு கிராமங்கள் வரை கரோனா நடுக்கத்திலிருக்க, அது பற்றிய பயம் கடுகளவுமின்றி இளந்தாரிகள் வெட்டியாய் ஊர் சுற்றி வருகின்றனர். துரத்தும் ஆபத்தின் வீரியமறியாமல் இன்னும் சில இளசுகள் ஏதோ விடுமுறைக் கொண்டாட்டம் போல ஜாலியாகக் கூட்டமாகக் கறி சமைத்துக் கொண்டாட்டமே நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகிலுள்ள பசுவந்தனைசால்நாயக்கன்பட்டி கிராமத்தின் இளைஞர்கள் அங்குள்ள கிணறுகளில் தூண்டில் போட்டு மீன் பிடித்தும் அதனைக் குழம்பாக்கி சமைத்து மீன் சாப்பாட்டை ஒரு பிடி பிடித்துவிட்டு, கிணறுகளில் ஆனந்தக் குளியலும் போட்டு பொழுதைக்கழிக்கிறார்கள்.
கரோனா அச்சத்தில் சமூக இடைவெளியைக் கடைப் பிடிக்க வேண்டுமென்ற பயம் இல்லாமல் அங்குள்ள 15 இளைஞர்கள் விவசாயக் கிணற்றில் மீன் பிடித்து அதனைக் காட்டுப் பகுதியில் கம,கம, மீன் குழம்பாக்கிச் சமைத்து அந்தப் பகுதியில் அனைவரும் பெரிய விருந்தே நடத்தியுள்ளனர். தங்களின் சாகசங்கள் வெளியே தெரிய வேண்டுமென்பதற்காக ஆர்வக்கோளாறாக, தங்களின் காட்டுப்புறா படை கானாவை செல்போனில் படமெடுத்து வெளியிட்டனர். இது மிகவும் வைரலானது. தங்களின் இந்த நிகழ்ச்சியை முகநூலில் போட்டோக்களாகவும் வெளியிட்டு குஷியாகியுள்ளனர். இதைக் கவனித்து அதிர்ந்த போலீசார் கன்னி வைத்து இவர்களனைவரையும் வளைத்துப் பிடித்துள்ளனர்.
கரோனா ஆபத்து மற்றும் சமூக இடைவெளி போன்றவைகளை அவர்களுக்கு உரைக்க வைக்கும் வகையில் அறிவுரை கூறி எச்சரித்ததுடன் அவர்களனைவரையும் 100 முறை தோப்புக்கரணம் போட வைத்தனர்.
இதிலிருந்து தப்பிக்கச் சிலர் மெதுவாகத் தோப்புக்கரணம் போட அவர்களை மறுபடியும் டிரில் வாங்கி விட்டது போலீஸ். மேலும் அந்தக் கும்பலில் ஆர்வத்தோடு மீன் குழம்பு சாப்பாட்டில் கலந்து கொண்ட பொன்செல்வன், மாரிமுத்து, கருப்பசாமி, முகேஷ், பாண்டி உள்ளிட்ட நான்கு பேர்கள் மீது ஊரடங்கை மீறியதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர் பசுவந்தனை போலீசார்.
ஆக்கிவச்ச மீன் குழம்பா...வேண்டாம்டா சாமி என பின்னங்கால் தெறிக்க ஓட்டமெடுப்பார்கள் போல.