புதுக்கோட்டை மாவட்டத்தில் வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் தமிழகத்தில் பல இடங்களில் தண்ணீர் தொட்டி பிரச்சனைகள் எழுந்து அடங்கியுள்ளது.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு இதே புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை அருகே சங்கம்விடுதி ஊராட்சி குருவண்டான்தெருவில் அனைத்து சமூக மக்களும் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டியில் கழிவுகள் கலக்கப்பட்டதாக பிரச்சனை எழுந்த நிலையில் அது கழிவுகள் இல்லை பாசிகள் குவிந்து கிடந்தது என்பது ஆய்வில் தெரிய வந்ததால் அந்தப் பிரச்சனை அடங்கியது.
அதனையடுத்து, மேலும் இதுபோன்ற பிரச்சனைகள் எழுவதை தடுக்கும் விதமாக அனைத்து குடிநீர் தொட்டிகளையும் சரியாக பராமரிக்க வேண்டும் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்று உள்ளாட்சிகளுக்கு அறிவுரை வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா அதிகாரிகளை ஆய்வு செய்யவும் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அறந்தாங்கி ஒன்றியம் சிலட்டூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த பிறகு சுனையக்காடு ஊராட்சியில் நடந்து முடிந்துள்ள சாலைப் பணியின் தரத்தை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து சுனையக்காடு ஊராட்சி பாளைவனம் கிராமத்தில் உள்ள பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சுத்தம் செய்து குளோரின் செய்யப்பட்டுள்ளதா என்பதை உள்ளாட்சி அலுவலர்கள் மூலம் தொட்டியில் ஏறி ஆய்வு செய்ய சொன்னதோடு குடிதண்ணீரை பிடித்து குளோரின் அளவுகளையும் பரிசோதனை செய்து பார்த்தார். இதேபோல் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் ஆய்வு மேற்கொண்டால் பொதுமக்களுக்கு சுத்தமான தண்ணீர் கிடைக்கும் என்கின்றனர் பொதுமக்கள்.