
விழுப்புரம் மாவட்டம் வடகரைத்தாழனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தாண்டவராயன் மகன் மோகன்(30). இவர் அப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக கட்டிடங்கள் கட்டுவதற்கான சென்ட்ரிங் வேலைகள் செய்து வருகிறார். இவரிடம் பல இளைஞர்கள் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இவர் தனது நண்பர் சேகர் என்பவரது குடும்பத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்ள சென்றுள்ளார். அரகண்டநல்லூர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தின் அருகே அதே பகுதியைச் சேர்ந்த மோகனின் நண்பர்கள் நேதாஜி, ஹரிஹர சுதன், ராம்குமார் ,பிரகாஷ், சரவணன், ஆகியவருடன் பெண்ணையாற்றுத் தரைப்பாலத்தில் அமர்ந்து தயாராக வாங்கி வைத்திருந்த மது பாட்டில்களை திறந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது மோகனுக்கும் சரவணனுக்கும் இடையே கட்டிட வேலை செய்வது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் மூத்தி சரவணன் தன் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து மோகன் கழுத்தில் பலமாக குத்தியுள்ளார். அதோடு கத்தியாலும் குத்தியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் மிதந்த மோகனை அங்கிருந்தவர்கள் மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து தகவல் பேரில் மருத்துவமனைக்கு வந்த அகரண்டநல்லூர் போலீசார் மோகனிடம் வாக்குமூலம் பெற்று வழக்கு பதிவு செய்து, மோகனை பீர் பாட்டிலால் குத்திய சரவணன் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.