Skip to main content

அப்பாவுக்கு ரொம்ப முடியல... இதை வச்சுட்டு பணம் கொடுங்க... பலரை ஏமாற்றிய இளம்பெண்!

Published on 18/12/2019 | Edited on 18/12/2019

சென்னை ஸ்டான்லி மருத்துவனையில் அப்பாவிற்கு உடம்பு சரியில்லை தங்க நாணயத்தை வைத்து கொண்டு பணம் கொடுங்கள் என்று இளம்பெண் ஒருவர் ஏமாற்றி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க வருபவர்களிடம் இளம் பெண் ஒருவர் தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறியுள்ளார். அப்போது தந்தையின் மருத்துவ செலவிற்கு பணம் இல்லை என்று அங்கு நோயாளிகளை பார்க்க வருபவர்களிடம் கூறியுள்ளார். அதோடு அந்தப் பெண் என்னிடம் இந்த தங்க நாணயம் தான் இருக்கிறது இதை வைத்து கொண்டு 500 ரூபாய் கொடுங்கள் போதும் என் தந்தையின் மருத்துவ செலவை இதை வைத்து பார்த்துக்கொள்வேன் என்று கூறியுள்ளார். நோயாளிகளை பார்க்க வருபவர்களும் இந்த பெண்ணிற்கு உதவலாம் என்று நினைத்து, அவள் சொல்வது உண்மை என்று நம்பி தங்க நாணயத்தை வெறும் 500 ரூபாய்க்கு பணம் கொடுத்து வாங்கி சென்றுள்ளனர். இதேபோல், பலரிடம் அந்த இளம்பெண் பணம் நாணயத்தை கொடுத்து பணம் பெற்றுள்ளார். அவ்வாறு தங்க நாணயத்தை வாங்கிச் சென்றவர்கள், அதனை கடையில் கொடுத்தபோது, அது போலி நகை என தெரிந்தது. 

 

priya



மேலும் அவை அனைத்தும் கவரிங் நகைகள் என தெரிந்து ஏமாந்தது அருகில் இருக்கும் வண்ணாரப்பேட்டை காவல் துறைக்கு இது குறித்து தகவல் அளித்துள்ளனர். அதன் பின்பு புகாரின் அடிப்படையில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு விரைந்த காவல் துறையினர் விசாரணை நடத்தி தங்க நாணயம் என ஏமாற்று வேலையில் ஈடுபட்ட இளம்பெண்ணை கைது செய்தனர். விசாரணையில், அந்த பெண்ணின் பெயர் ப்ரியா என்பதும், அவர் ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. ப்ரியாவிடம் நடந்த விசாரணையில், அவர் மருத்துவமனை வளாகத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தது காவல் துறைக்குத் தெரியவந்துள்ளது. 


அப்போது போலீஸார் நடத்திய விசாரணையில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவலை அந்தப் பெண் தெரிவித்துள்ளார். அதில், கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்டான்லி மருத்துவமனையில் நோயாளியை பார்க்க ஆட்டோவில் வந்த மூதாட்டியிடம், நூதன முறையில் செயின் பறித்தது இவர்தான் என்பதும் தெரிய  வந்தது. பின்னர் 3 சவரன்  நகையை பறிமுதல் செய்த போலீசார், ப்ரியாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல்  சிறையில் அடைத்தனர். மேலும் தங்கச் சங்கிலியை பறிகொடுத்த மூதாட்டி ஏற்கனவே வண்ணாரப் பேட்டை காவல் நிலையத்தில் அளித்திருந்த புகார் நிலுவையிலிருந்த நிலையில், இப்போது அந்த புகார் தொடர்பான குற்றவாளி சிக்கியுள்ளதாக வண்ணாரப் பேட்டை காவல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இளம்பெண் ஒருவர் பல மோசடி செயல்களில் ஈடுபட்டு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்