ஈரோட்டில் இருந்து சென்னைக்கு 'ஏற்காடு எக்ஸ்பிரஸ்' ரயில் தினமும் இரவு 9 மணிக்கு இயக்கப்பட்டு வந்தது. 30 வருடங்களுக்கும் மேலாக இயக்கப்பட்டுவந்த இந்த ரயில் சேவை, கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இயக்கப்படாமல் உள்ளது. கிட்டத்தட்ட 9 மாதங்கள் கடந்தும் இந்த ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படவில்லை.
ஈரோட்டில் இருந்து நேரடியாகச் சென்னைக்கு செல்லும் ஒரே எக்ஸ்பிரஸ் ரயில் இதுதான். தற்போது படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுப் போக்குவரத்துக்கான ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. ஈரோடு வழியாக மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டும் தொடர்ந்து இயக்கப்படாமல் உள்ளது. இதனால், வியாபாரிகள், மாணவர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்கக் கோரியும், ரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்தும், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு சார்பில் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
இன்று மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, ஈரோடு மாநகர்ப் பகுதியில் பல இடங்களில் கண்டன போஸ்டர்களையும் ஒட்டியுள்ளனர். ரயில்வே நிர்வாகம் இனியும் தாமதிக்காமல் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால், அடுத்த கட்டமாக மறியல் போராட்டம் நடைபெறும் என்று ஈரோடு சிறுபான்மைப் பிரிவு காங்கிரசார் தெரிவித்துள்ளனர்.