தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து முதல் கட்ட தேர்தல் கடந்த 27ம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று (டிசம்பர் 30) தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஏழு ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்தநிலையில், மீதி உள்ள குஜிலியம்பாறை, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், பழனி, தொப்பம்பட்டி, வேடசந்தூர், வடமதுரை ஆகிய ஏழு ஒன்றியங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று நடத்தப்பட்டது.
இந்த தேர்தலில் வார்டு உறுப்பினர்களுக்கு வெள்ளை நிற ஸ்லிப்பும், ஊராட்சித் தலைவருக்கு இளஞ்சிவப்பு நிற ஸ்லிப்பும், ஒன்றிய கவுன்சிலருக்கு பச்சை நிற ஸ்லிப்பும், மாவட்ட கவுன்சிலருக்கு மஞ்சள நிற ஸ்லிப் என ஓட்டுச்சீட்டுக்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டதின் மூலம் அந்தந்த பகுதியில் உள்ள வாக்காளர்கள் ஒவ்வொருவரும் தலைக்கு நான்கு ஓட்டுக்கள் வீதம் செலுத்தினார்கள்.
இந்த ஏழு ஒன்றியங்களும் கிராம பகுதி என்பதால் அந்தந்த பகுதியில் உள்ள மக்கள் ஆர்வத்துடனே வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்து சென்றனர். இதில் மதியம் 3 மணி நிலவரப்படி ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் 60சதவிகிதம் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது. அதுபோல் தொப்பம்பட்டி ஒன்றியத்தில் 70 சதவிகித ஓட்டுக்களும், வேடசந்தூர் ஒன்றியத்தில் 57 சதவிகித ஓட்டுக்களும், குஜிலியம்பாறை ஒன்றியத்தில் 60 சதவிகித ஓட்டுக்களும், வடமதுரை ஒன்றியத்தில் 60 சதவிகித ஓட்டுக்களும், கொடைக்கானல் ஒன்றியத்தில் 61 சதவிகித ஓட்டுக்களும் பதிவாகியது.
அந்த அளவுக்கு வாக்காள மக்கள் ஒவ்வொரு பகுதியில் உள்ள பூத்துகளில் ஆர்வமாக வரிசையில் நின்று வாக்களித்தனர். இந்தநிலையில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு மாவட்ட செயலாளருமான கொறடா சக்கரபாணியின் சொந்த ஊர் கள்ளிமந்தையம் என்பதால் அந்த ஊரில் உள்ள தனியார் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.
அதுபோல் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி தனது சொந்த ஊரான ஜவ்வாதுபட்டியில் உள்ள அரசு பள்ளியில் வாக்களித்தார். அதைத் தொடர்ந்து ஏழு ஒன்றியத்தில் உள்ள வாக்காள மக்களும் தொடர்ந்து வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று வாக்களித்தனர். இதில் ஒட்டன்சத்திரம் ஒன்றியம், தொப்பம்பட்டி ஒன்றியத்தில் தான் அதிக வாக்குகள் பதிவாகியது.