தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தில் அங்கம் வகிக்கும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் என படைப்பாளிகள் அனைவரும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் "மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டின் மதச்சார்பின்மை மரபைத் தகர்த்து, மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தக் கூடியது என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டிய கடமையுடன் கீழ்கண்ட கோரிக்கையை மத்திய அரசிற்கு முன் வைக்கிறோம். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியுள்ள முஸ்லிம்கள் அல்லாத பிற ஆறு மதத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது.
குடியேறிகளை மத அடிப்படையில் பிரிப்பதும், இலங்கை, மியன்மார் போன்ற நாடுகளிலிருந்து குடியேறியுள்ள ஈழத்தமிழர்கள், ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஆகியோருக்கு குடியுரிமை மறுப்பதும் அநீதியானது; பாரபட்சமானது; இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமை பிரிவு 14 ஐ மீறுவதுமாகும் என்று எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்ததை மத்திய அரசு சற்றும் மதிக்காமல் ஆணவத்துடன் இந்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
மக்கள் நலன் சார்ந்த திட்டங்களைவிட, தங்களது பெரும்பான்மை மதம் சார்ந்த இந்து ராஷ்டிரா லட்சியத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்வது பேரழிவிற்கு வித்திடும் என்பதை கவலையுடன் எடுத்துரைக்க விரும்புகிறோம். நூற்றாண்டுகளாக இந்திய மக்களிடையே நிலவி வரும் கலப்புப் பண்பாடும், மதச்சார்பின்மை நெறியும், பாதுகாக்கப்பட, குடியுரிமை திருத்தச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டு பல நாடுகளிலிலிருந்து குடியேறியுள்ள அனைத்து மதத்தினரும் சமவுரிமை வழங்கப்படக் கோருகிறோம். உரிமைக்காகக் குரல் கொடுத்துப் போராடிய மாணவர் சமுதாயத்தின் மீது நடத்தப்பட்ட அடக்குமுறையைக் கண்டிப்பதுடன் அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்யவும் வலியுறுத்துகிறோம்" என குறிப்பிட்டுள்ளனர்.