புதுக்கோட்டையில் 3 வது புத்தக திருவிழா 15 ந் தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு விருந்தினர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வருகின்றனர். இந்த விழாவில் கலந்து கொண்ட எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். புத்தகத் திருவிழாவில் வாழ்க்கை அழைக்கிறது என்ற தலைப்பில் ஆற்றிய உரை:
எல்லோருக்கும் ஒரே மாதிரிதான் இரவு, பகல் வருகிறது. ஆனால் ஒன்று போல எல்லோருமாக வாழ்கிறோமா? இங்கே ஆணுக்குக் கிடைக்கிற அதிகாரம் பெண்களுக்கு கிடைப்பதில்லை. அதுவும் சமூக செயல்பாடுகளில் ஈடுபடும் பெண்களுக்கு கிடைப்பது எல்லாம் அவமானங்களே! சிறகுகள் கொடுத்து மகளை வளர்க்கிறோம். திருமணம் செய்து வைக்கும்போது முதலில் முறிக்கப்படுவது அந்தச் சிறகுகளைத்தான். எவ்வளவு திறமைமிக்கவளாக இருந்தாலும் அங்கு வெறும் பெண்தான். முதலில் சுதந்திரத்தை வீட்டில் இருந்து கற்றுக்கொடுக்க வேண்டும்.
ஒரு காலத்தில் பிள்ளைபிடிப்பவர்கள் இருந்ததாக அறிய முடிகிறது. இன்றைக்கு நர்சரிப் பள்ளிகள் அந்த வேலையைச் செய்துகொண்டிருக்கிறது. குழந்தைக்கு தரமாக கல்வி அவசியம்தான். ஆனால், அது எந்த வயதில், எந்தமாதியான கல்வி என்பது முக்கியம். வண்டிக்கு பெட்ரோல் நிரப்புவது போல குழந்தைக்கு கல்வியை புகட்ட நினைப்பது தவறு. அது வாழ்க்கையை புரிந்துகொள்வதாக இருக்க வேண்டும்.
இன்றைக்கு பெரியவர்கள் சொல்லும் அறிவுரைகள் நமக்கு கசக்கிறது. அறிவுரை என்பது அனுபவம். அது முக்கியம். மூத்தவர்களை உதாசீனப்படுத்தாதீர்கள். நாளை நாம் அந்த கட்டத்தை அடைந்தே தீருவோம் என்பதை மறந்துவிடாதீர்கள். தாத்தாக்களை பேரன்களோடு பேசவிடுங்கள். மனிதகுல வரலாறு குழந்தைகள் வழியாக மீண்டும் நிகழ்த்திக் காட்டப்படுகிறது.
கற்றறிந்த உங்களைப் போன்றவர்களுக்கு ஒரு நகைச்சுவை நடிகனுக்குக்கான மரியாதைகூட தரப்படுவதில்லையே என்று ஒரு கல்லூரி விழாவில் என்னிடம் கேட்டார்கள். திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் அவருக்கு என்ன மரியாதை இருந்தது. ஆனால், 2500 ஆண்டுகளாக அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். கவிச்சக்கரவர்த்தி கம்பன், பாரதி, புதுமைப்பித்தன், கபிலர், சேக்கிழார் அவர்கள் வாழ்ந்த காலத்தில் எப்படி நடத்தப்பட்டார்கள். ஆனால் இன்றைக்கும் அவர்களைக் நாம் கொண்டாடுகிறோமே! கலைகள் காலத்தைத் தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கும். தமிழில் எழுதுகிறோம் என்பதே எனக்குப் பெருமைதான்.
ஒரு முழு நிலவை பாலைவனத்தில் நின்று ரசித்துப் பாருங்கள் பரவச நிலையை அடைவீர்கள். அது உண்மையிலேயே அமுதத்தைப் பொழிந்துகொண்டிருக்கும். வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள் ஒவ்வொரு நாளும் அது உங்களுக்கு கற்றுத்தரும். வாழ்கை ஆயிரம் கோடி இன்பம் கொண்டது. ஒரு சாதாரண மீன் கடலைத் தாண்டிச் செல்கிறது. சைபீரியாவில் உள்ள ஒரு பறவை இங்கு வந்து முட்டையிட்டு இனவிருத்தி செய்கிறது. மனிதன் மட்டும் இருந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் என்கிறான். உங்கள் குழந்தைகளை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். அது அவர்களுக்கு மிகப்பெரிய அனுபவத்தைக் கொடுக்கும். அனுபவத்திற்கு இடையேதான் வாழ்க்கை இருக்கிறது.
இதர திருவிழாக்களைப் போல புத்தகத் திருவிழாக்களை நடத்துவது அவ்வளவு எளிதல்ல. இதுபோன்ற சிறிய ஊர்களிலும் புத்தகத் திருவிழாக்கள் நடைபெறுவது மிக முக்கியமான பணியாகும். தமிழகத்தில் புத்தகத் திருவிழாக்கள் ஒரு பண்பாட்டு இயக்கமாக, அறிவு இயக்கமாக வளர்ந்து வருகிறது என்பதற்கு அடையாமே இதுபோன்ற விழாக்கள். புத்தகத் திருவிழாக்களில் பேச அழைக்கும்போதெல்லாம் நான் மறுப்பே சொல்வதில்லை. காரணம் இங்குதான் நான் நிறைய கற்றுக்கொள்கிறேன்.
நான் படித்த எந்தப் புத்தகமும் என்னை தவறாக வழிநடத்தியதில்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆயுதங்களைப் பார்த்து பயப்படுவதில்லை. எழுத்துக்களை, கலைகளைப் பார்த்துத்தான் பயப்படுகிறார்கள். இளைஞர்களின் எதிர்காலம் புத்தகங்களில்தான் இருக்கிறது. புத்தகத் திருவிழா என்பது வெறும் வணிகச் சந்தை அல்ல. அது அறிவை அச்சிட்டுத்தரும் பொக்கிசம். நீங்கள் அறிவைப் பெறுங்கள். பெற்ற அறிவை மற்றவர்களுக்காகப் பயன்படுத்துங்கள். இவ்வாறு பேசினார்.