
டெல்லி நீதிமன்ற நீதிபதி ஷிவாங்கி மங்களா முன்பு கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி காசோலை மோசடி தொடர்பான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்து குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் இன் கீழ் ஜாமீன் பத்திரங்களை வழங்குமாறு உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பால் ஆத்திரமடைந்த குற்றவாளி, நீதிபதி ஷிவாங்கி மங்களா மீது பொருட்களை வீசி தாக்க முயன்றார். மேலும் அவர், ‘நீ யார்? வெளியே வந்து என்னை பார்... நீ எப்படி உயிருடன் வீடு திரும்புகிறாய் என்று பார்ப்போம்’ என்று நீதிபதிக்கு கொலை மிரட்டல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர் தனது வழக்கறிஞரிடம், தீர்ப்பை தனக்கு சாதகமாக மாற்ற எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று கூறியதாகக் கூறப்படுகிறது. இதனால், நீதிமன்றமே களேபரமானது.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து குற்றவாளி மீது தகுந்த சட்ட நடவடிக்கை வேண்டும் என நீதிபதி ஷிவாங்கி மங்களா உத்தரவிட்டுள்ளார். நீதிபதியின் அந்த உத்தரவில், குற்றம் சாட்டப்பட்டவரும், அவரது வழக்கறிஞர் அதுல் குமாரும் தன்னை மிரட்டியது மட்டுமல்லாமல், தனது பதவியை ராஜினாம செய்ய அழுத்தம் கொடுக்கும் முயற்சியில் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக நீதிபதி ஷிவாங்கி மங்களா குறிப்பிட்டு, இந்த சம்பவம் குறித்து தகுந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், இது குறித்து குற்றவாளியின் வழக்கறிஞர் அதுல் குமாருக்கு இது குறித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.