
கோயம்பேட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்து அழைத்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (21.04.2025) இரவு முதல் 2500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் (MGNREGA) எனப்படும் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கத் தனியாக அடையாள அட்டை வழங்க வேண்டும், ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று (22.04.2025) கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தலைமைச் செயலகம் வரையில் பேரணியாகச் சென்று மனு அளிக்கத் திட்டமிட்டிருந்தனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளை போலீசார் குண்டு கட்டாகக் கைது செய்து அங்கிருந்து அழைத்து சென்று திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.