உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தனது வீட்டிற்கு அருகிலுள்ள நூலகத்திற்கு பணியிட மாறுதல் வழங்க வலியுறுத்தி கால்கள் செயல் இழந்த மாற்றுத்திறனாளி நூலகர் புதுக்கோட்டையில் காத்திருப்புப் போராட்டம் நடத்தினார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அரசு கிளை நூலகத்தில் மூன்றாம் நிலை நூலகராகப் பணியாற்றி வருபவர் செ.சுடர்வேல். இவர் இரண்டு கால்களும் செயல் இழந்த மாற்றுத்திறனாளி. இவரது குடும்பம் ஆலங்குடியில் உள்ளது. தற்பொழுது ஆலங்குடி கிளை நூலகத்தில் அரசு நிதி மூன்றாம்நிலை பணியிடம் காலியாக உள்ளது. இந்த இடத்திற்கு தன்னை பணியிட மாறுதல்செய்ய வேண்டுமாறு கடந்த 21.02.2018 அன்று மாவட்ட நூலக அலுவலரிடம் மனு அளித்துள்ளார்.
மாவட்ட நூலக அவலரோ பணியிட மாறுதல் வழங்காமல் காலம் தாழ்த்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், சென்னையில் உள்ள துறை இயக்குனரிடம் நூலகர் சங்க மாநில நிர்வாகிகளுடன் சென்று பணியிட மாறுதல் வேண்டி மனு அளித்துள்ளார். இவரின் உடல் நிலையைக் கருத்தில்கொண்டு மாவட்ட நூலக அலுவலரிடம் உடனடியாகப் பணியிட மாறுதல் வழங்குமாறு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுநாள் வரை மேற்படி மாற்றுத்திறனாளி நூலகருக்கு பணியிட மாறுதல் வழங்கப்படவில்லை.
இதனால் விரக்தியடடைந் மாற்றுத்திறனாளி நூலகர் வெள்ளிக்கிழமையன்று புதுக்கோட்டை மாவட்ட நூலக அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தை நடத்தினார். கால்கள் செயல் இழந்த ஒரு மாற்றுத் திறனாளியை இப்படி அலைக்கழிக்கலாமா? தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் இவருக்கு நியாயம் வழங்குமா?