ஈரோடு மாவட்ட நூறு நாள் வேலைத்திட்ட தொழிலாளர் சங்கத்தின் பவானிசாகர் ஒன்றிய பேரவை கூட்டம் இன்று பவானிசாகரில் நடைபெற்றது. நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு வேலை அல்லது நிவாரணம் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.எல்.சுந்தரம் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ‘’பருவமழை தவறுவதாலும், வேளாண்மையில் ஏற்படும் மாற்றங்களாலும் கிராமப்புற வேலையின்மை அதிகரித்து வருகிறது. கிராமப்புற தொழிலாளர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி வருகிறார்கள். கிராமப்புற தொழிலாளர்களுக்கு ஆண்டிற்கு 100 நாளாவது வேலை வாய்ப்பினை உத்திரவாதப்படுத்த 2005 ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இச்சட்டம் கிராமப்புற மக்களுக்கு ஓரளவு வேலை வாய்ப்பினை அளித்து வந்தது. ஆனால் இச்சட்டத்தின் நோக்கத்தையே சிதைக்கின்ற வேலையை அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இச்சட்டத்தின் கீழ் வேலை அளிப்பதற்கான திட்டங்களை நிறைவேற்ற ஒதுக்கப்பட்ட நிதியை கட்டிடங்கள் கட்ட அரசுகள் பயன்படுத்துகின்றன. இதனால் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு வெகுவாக குறைந்துவிட்டது. இச்சட்டப்படி வேலை கேட்கும் தொழிலாளர்களுக்கு 15 நாட்களில் வேலை கொடுக்க முடியாவிட்டால் வேலையில்லா கால நிவாரணம் வழங்க வேண்டும். அந்த அடிப்படையில் பவானிசாகர் ஒன்றியத்தில் வேலை கேட்டு பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் அல்லது சட்டப்படி நிவாரணம் வழங்க வேண்டும் எனக்கேட்டு, வரும் ஜுலை 2 ம் தேதி பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிடுவது" என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.