ஸ்ரீவைகுண்டம் அணையின் வடகால்வாய் கரையில், நீர்ப்பிடிப்புப் பகுதியில் கட்டப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை காலிசெய்யக்கோரி வருவாய்த்துறையினர் நோட்டீஸ் ஒட்டியுள்ளதால் பொதுமக்கள் கவலையுடன் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றின் கடைசி அணையாக ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டின் வடக்கு கால்வாய் பகுதியின் கரையோரம் சுமார் 11 கிலோ மீட்டர் தூரத்தில் ஏரல் உள்ளது. இதன் இடைப்பட்ட பகுதியில் கால்வாய் கரையோரம் சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு அண்ணாநகர், சாமிபுரம், மருத்துவர்காலனி, மகராஜாபுரம், கடையம்புதூர் என உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான குடுமபத்தினர் வசித்து வருகின்றனர். நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளதாக கடந்த 28ம் தேதி வருவாய்த்துறையினர் அங்குள்ள கடைகள் மற்றும் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்ற உள்ளதாகவும், மின்சாரம் இணைப்பும் துண்டிக்கப்படும் எனவும் அதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவிட்டதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். தற்பொழுது இரண்டாவது தடவையாக நோட்டீஸ் வருவாய்த்துறையினரால் வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக 4 தலைமுறையாக வீடு கட்டி வசித்து வருவதாக கிராம மக்கள் தங்கள் வீடுகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால்,ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து குறித்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதியினரின் கோரிக்கையாக உள்ளது. இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.