சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் வகையிலும், அவர்களின் தயாரிப்புப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், மாநில, மாவட்ட, வட்டார அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களின் விற்பனைக் கண்காட்சிகளைத் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி விற்பனைக் கண்காட்சி நாளை (07.10.2023) துவங்குகிறது. நாளை முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் தங்களின் உற்பத்திப் பொருட்களான பட்டு. பருத்தி ஆடைகள், மண்பாண்டப் பொருட்கள், செயற்கை ஆபரணங்கள் பல்வேறு உலோகங்களால் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்கள், தரமான வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும் சணல், காகிதம், பனை ஓலை மற்றும் வாழை நார் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பொருட்கள், பல்வேறு தோல் பொருட்கள், நவராத்திரி கொலு பொம்மைகள், வாசனைப் பொருட்கள், மரச் சிற்பங்கள், சுடுமண் சிற்பங்கள், மூலிகைப் பொருட்கள், பாரம்பரிய கிராமிய உணவு வகைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாகப் பாரம்பரிய உணவுகளை உண்டு மகிழ்வதற்கென தனி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.