ஜெயங்கொண்டம் நகராட்சி நிர்வாகக் கூட்டத்தில் பெண் கவுன்சிலர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி நிர்வாகக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நகராட்சியிலுள்ள வார்டு கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது நகராட்சியில் நடைபெற உள்ள வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது அதிகாரிகள் நகராட்சியில் உள்ள பல்வேறு வார்டு பகுதிகளில் ஒரு கோடி ரூபாய் செலவில் சாலை சீர்திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தனர்.
அப்போது பெண் கவுன்சிலர்கள் இந்த அறிவிப்பை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். பெண் கவுன்சிலர்கள் வெற்றி பெற்ற மூன்று வார்டுகளில் சாலை பணிகள் செய்வதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதை கண்டித்து நகர்மன்றக் கூட்டத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘பெண் கவுன்சிலர்களை புறக்கணிப்பது நியாயம் தானா? ஜெயங்கொண்டம் நகராட்சியில் நகராட்சி பொது நிதி மற்றும் கலைஞர் மேம்பாட்டு நிதியில் சாலை பணிகளுக்கு 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய நகராட்சி அதிகாரிகள், பெண் கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ள வார்டுகளான 4, 17, 20 ஆகிய வார்டுகளை முற்றிலும் புறக்கணித்ததை கண்டிக்கிறோம்’ எனக் கூறி அவர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர்.