
திண்டுக்கல் மாவட்டம் தர்மத்துப்பட்டியில் கடந்த வாரம் பெண் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் பெண்ணின் ஆண் நண்பரே கொலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா கன்னிவாடி கிராமத்திற்கு உட்பட்ட தர்மத்ததுப்பட்டி அருகே உள்ளது பன்றி மலைச்சாலை. இந்த பகுதியில் அமைதிச் சோலை என்ற இடம் அமைந்துள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த பகுதியில் 60 அடி பள்ளம் உள்ளது. கடந்த 13ஆம் தேதி இந்த பள்ளத்தில் 22 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் ஒருவர் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
கால்நடை மேய்ச்சலுக்கு சென்றவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கன்னிவாடி போலீசார் பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருந்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கன்னிவாடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில் உயிரிழந்த பெண் தாய், தந்தை இல்லாமல் மதுரையில் ஆசிரமத்தில் பயின்று வந்தர் என்று தெரியவந்துள்ளது. 12 ஆம் வகுப்பு வரை படித்திருக்கும் நிலையில் மதுரையில் வேலை செய்து வந்த அப்பெண்ணுக்கு திண்டுக்கல் நத்தம் பகுதியில் உள்ள எமக்கல்லாபுரத்தைச் சேர்ந்த பிரவீன் என்ற இளைஞருடன் நட்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
காலப்போக்கில் இருவரும் ஒன்றாக இணைந்து திண்டுக்கல்லில் உள்ள தனியார் துணிக்கடையில் வேலை செய்து வந்துள்ளனர். இருவரும் லிவிங் டூகெதரில் கடந்த ஒரு வருடமாக இருந்து வந்துள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பலமுறை பிரவீனிடம் அப்பெண் வலியுறுத்தியுள்ளார். இரண்டு முறை அந்த பெண் கர்ப்பமாகி கரு கலைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பிரவீனிடம் திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தி வந்ததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கருத்து வேறுபாடு முற்றி பிரவீன் இளம் பெண்ணை அமைதிச் சோலைக்கு அழைத்துச் சென்று கொலை செய்து மறைக்கப் பெட்ரோல் ஊற்றி சடலத்தை எரித்தது அவர் கொடுத்த வாக்குமூலத்தில் தெரிய வந்துள்ளது.