சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.
கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.
காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.