தாம்பரத்தில் வடமாநில இளம்பெண் ஒருவர் செல்போனில் பேசிக்கொண்டிருந்த பொழுது மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கும்கும் குமாரி, ஊர்மிளா, பூனம் ஆகிய மூன்று பேர் தாம்பரம் கடப்பேரியில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில் தங்கி இருந்தனர். தாம்பரத்தில் உள்ள தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் இவர்கள் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி அவர்கள் தங்கி இருந்த விடுதியின் மொட்டைமாடி பகுதியில் தாழ்வான நிலையில் செல்லும் உயர் மின்னழுத்த கம்பியின் அருகே நின்று கும்கும் குமாரி என்ற பெண் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது அந்த மின்சாரக் கம்பியில் இருந்து செல்போன் மூலம் மின்சாரம் பாய்ந்து கும்கும் குமாரி தூக்கி வீசப்பட்டார். அவரை காப்பாற்ற முயன்ற ஊர்மிளா, பூனம் ஆகியோரையும் மின்சாரம் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. தூக்கி வீசப்பட்டுக் காயமடைந்த கும்கும் குமாரி உள்ளிட்ட மூன்று பேரும் காயங்களுடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியே பரபரப்பில் ஆழ்ந்தது. இந்த நிலையில், 60 சதவிகித தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த கும்கும் குமாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.