தமிழ்நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்து திமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து வெற்றி பெற்றவர்கள் கடந்த 2ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டனர். இந்நிலையில், இன்று (4ஆம் தேதி) மேயர், துணை மேயர், நகர் மன்றத் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வேட்பாளர்களை கட்சி தலைமைகள் நேற்று அறிவித்தன.
அதன்படி, கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு திமுக கூட்டணி கட்சியைச் சேர்ந்த அமுதலட்சுமி ஆற்றலரசு விருப்ப மனு அளித்திருந்த நிலையில் அவரை எதிர்த்து யாரும் விருப்பம் அளிக்காததால் அமுதலட்சுமி ஆற்றலரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி நகராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு திமுக கூட்டணி கட்சியைச் சேர்ந்த வெண்ணிலா விருப்ப மனு அளித்திருந்த நிலையில் அவரை எதிர்த்து யாரும் விருப்பம் அளிக்காததால் வெண்ணிலா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியில் நடைபெற்ற நகர்மன்றத் தலைவர் தேர்தலில் வி.சி.க.வைச் சேர்ந்த சுமதி சிவக்குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி மன்றத் தலைவராக திமுக நகர கழக செயலாளர் அஞ்சுகம் கணேசன் தேர்வு செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகர் மன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த டாக்டர் சங்கவி முருகதாஸ் போட்டியின்றி தேர்வானார்.