சிதம்பரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் நபிகள் நாயகம் பிறந்தநாளை சமய நல்லிணக்க நாள் விழாவாகவும், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள வக்ஃப் வாரிய தலைவர் நவாஸ் கனி எம்.பி க்கு பாராட்டு விழா, மதரஸா ஆண்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நகர தலைவர் அன்வர் அலி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முஹம்மது ஜக்கரியா வரவேற்றார். மாநில நிர்வாகி அப்துல் ரஹ்மான் ரப்பானி துவக்கி வைத்துப் பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பேசுகையில், “முதலமைச்சராக திமுக தலைவர் கருணாநிதி இருந்த போது சிறுபான்மை மக்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தேவைகளையும் செய்தார் அவரின் வழிதோன்லாக வந்த முதல்வர் ஸ்டாலின் சிறுபான்மை மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். வக்பு வாரியத்தில் உள்ள பிரச்சனைகளைச் சரி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்” என்றார்.
இதனை தொடர்ந்து இராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவர் நவாஸ்கனி, தருமபுர ஆதீனம் மாணிக்கவாசக கட்டளை தம்பிரான், தமிழ்நாடு ஜமாத்துல் உலமா மாநில செய்தி தொடர்பாளர் இல்யாஸ் ரியாஜி, இ.யூ. மு.லீக் மாநில பொருளாளர் ஷாஜஹான், மாநில பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர், கவிமாமணி அப்துல் காதர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு சமய நல்லிணக்கம் குறித்து பேசினார்கள்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் கலந்துகொண்டு தற்போது உள்ள சூழ்நிலையில் இஸ்லாமியர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள். தமிழக அரசு எவ்வாறு சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கிறது என்பத குறித்து பேசினார். இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி தலைவர் முஹம்மது முஸ்தபா, நகர துணைத் தலைவர் அப்துல் ரியாஸ், நகரப் பொருளாளர் மௌலவி ஷாஹுல் ஹமீது பாகவி, பேராசிரியர்கள் முஹம்மது அலி, சுஹபத் அலி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர செயலாளர் மஹபூப் உசேன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். நகர துணைத் தலைவர் அப்துல் ரியாஸ் நன்றி கூறினார். இந்நிகழ்வில் சிதம்பரம் சுற்றுவட்ட பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.