ஜனவரி மாதம் பொங்கல் வரவிருக்கும் நிலையில், 'ஜல்லிக்கட்டு' நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு கடந்த மாதம் 26-ஆம் தேதி வெளியிட்டிருந்தது. ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூரில் வரும் ஜனவரி 16-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது. ஜன.14-ஆம் தேதி அவனியாபுரத்திலும், ஜன.15-ஆம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பிதழ்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன.
ஆனால் கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக பல்வேறு அறிவிப்புகளைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டு வருகிறது. வரும் ஜனவரி 10-ஆம் தேதி வரை சில புதிய கட்டுப்பாடுகளை தமிழக முதல்வர் வெளியிட்டிருந்தார். இன்று முதல்வர் தலைமையில் மீண்டும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்ற நிலையில் முன்பு இருந்ததைப் போன்று வார இறுதியில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்குத் தடைவிதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் விரைவில் பொங்கல் பண்டிகை வருவதால் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிற நிலையில் திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்தது.
இந்நிலையில் கட்டுப்பாடுகளுடன் திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு நடைபெறும் என வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். ''மதுரையில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடைபெறும். சூழலுக்கு ஏற்றவாறு ஜல்லிக்கட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்'' என அவர் தெரிவித்துள்ளார்.