கேம் விளையாடி பணம் சம்பாதிக்க போவதாக அடம்பிடித்த குழந்தையின் பெற்றோருக்குக் கொடுத்த கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடம் விவரிக்கிறார்.
ஒரு பையன் அப்பாவின் கிரிடிட் கார்டில் இருந்த ரூ.1 லட்சத்தை எடுத்துக்கொண்டு அதை வீட்டில் சொல்லாமல் இருந்திருக்கிறான். அந்த பையனின் அப்பாவுக்கு இந்த விஷயம் தெரிந்தவுடன் அந்த பையனை திட்டியிருக்கிறார். முதலில் அந்த பையன் தன்னுடைய தவறை ஒப்புக்கொள்ளவில்லை. அதன் பிறகு அடித்து அந்த பணம் எங்கு இருக்கிறது என்று கேட்டு வாங்கியிருக்கின்றனர். அதன் பின்பு பெற்றோர் தங்களது மகனுக்கு கவுன்சிலிங் கொடுக்க என்று என்னிடம் அழைத்து வந்தனர். பையனிடம் பேசியதில் கேம் விளையாடி பணம் சம்பாதிக்க போகிறேன் அதற்காகத்தான் பணத்தை எடுத்தேன் என்றான். அதைக் கேட்ட அவனின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. என்ன தம்பி படிக்கிறாய்? என்று கேட்டதற்கு 7ஆம் வகுப்பு படிக்கின்றேன் என்றான். அதோடு தனக்கு படிக்க இஷ்டமில்லை, எப்படியும் படித்து பணம் சம்பாதிக்கப் போகிறோம் அதனால் இப்போதே கேம் விளையாடி பணம் சம்பாதிக்கப் போவதாக கூறினான்.
அந்த பையனிடம் தொடர்ந்து பேசியதில், தன்னுடைய நண்பர்களைப் பார்த்து இந்த முடிவை எடுத்தது தெரியவந்தது. அதோடு அந்த சிறுவனிடம் தாழ்வு மனப்பான்மை இருப்பதும் தெரிந்தது. பையனின் பெற்றோர் அவசர தேவைக்கு வைத்திருந்த பணத்தை செலவு செய்யக் காரணம் தன்னுடைய நண்பர்கள் நன்றாக இருக்கிறார்கள் தன்னிடம் எதுவும் இல்லை என்ற பையனின் மனநிலைதான். அதனால்தான் பணம் சம்பாதிக்க முயற்சித்திருக்கிறான். அந்த பையன் என்னிடம் கவுன்சிலிங் பெற்று வந்தபோது, கண்ணைப் பார்த்து பேசும் அளவிற்கு கூட தன்னம்பிக்கை இல்லாதவனாக இருந்தான். என்ன சொன்னாலும் கேட்காமல் யூடியூப்பில் சப்ஸ்கிரைபர் வந்த பிறகு கேம் விளையாடி அதைப் பதிவேற்றம் செய்து தானும் சம்பாதித்து விடுவேன் என்று சொல்லிக்கொண்டே இருந்தான்.
பின்பு பொறுமையாக அந்த பையனிடம், உன்னால் சம்பாதிக்க முடியும். ஆனால் அதற்கு நிறைய வழிகள் இருக்கிறது. முதலில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். முடிந்தளவிற்கு மொபைல் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள். கேம் விளையாடலாம் தவறில்லை. ஆனால் அதற்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை படிப்பில் காட்டினால் எதிர்காலத்தில் சொல்லிக்கொள்ளும்படியான வேலை கிடைக்கும். எனவே கேம் விளையாட நேரம் ஒதுக்கினால், படிப்பதற்கும் நேரம் ஒதுக்கு என்றேன். அதோடு அந்த பையனின் பெற்றோர்களுக்கு கண்டித்து வளர்க்கலாம் தவறில்லை. ஆனால் நீங்கள் பொருளாதார ரீதியாக கஷ்டப்படுவதை உணரக்கூடிய சூழலில் குழந்தை இல்லை. முடிந்தளவிற்கு குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு விளையாடுவது, உட்கார்ந்து பேசுவது, குழந்தையிடம் என்ன திறமை இருக்கிறது என்று கண்டறிந்து அதற்கான வழியில் நடத்துவது போன்ற விஷயங்களைக் கற்றுக்கொடுங்கள் என்றேன். மேலும் குழந்தைகளுக்கு சில விஷயங்களில் எல்லையை உருவாக்குங்கள் தேவையற்ற விஷயத்தில் அதிகம் கவனம் செலுத்தவிடாமல் அவசியமானதைச் செய்யச் சொல்லுங்கள் என்று ஆலோசனை வழங்கி வருகிறேன். இப்போது அந்த சிறுவன் தன்னுடைய ஸ்கீரின் டைமிங்கை குறைத்து கொண்டு மற்ற விஷயங்களில் பெற்றோர்களுடன் கவனம் செலுத்தி வருகிறான்.
டிஜிட்டல் உலகில் குழந்தைகளை மொபைல் பயன்படுத்த வேண்டாம் என்று சொன்னால் கேட்க மாட்டார்கள். முடிந்தளவிற்கு அதை எப்படி குறைக்கலாம் என்ற முயற்சிகளை பெற்றோர்கள் எடுக்க வேண்டும். அதற்கேற்ப மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த வைக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளின் திறனைக் கண்டறிந்து அதற்கேற்ப வழிநடத்த முடியும். இல்லையென்றால் இதுபோல தேவையற்ற சூழலுக்கு குழந்தைகள் தள்ளப்படுவார்கள். அதனால் குழந்தைகளின் படிப்பும் கெட்டுவிடும். படிக்கின்ற வயதில் மற்றவைகளில் அதிக கவனம் செலுத்த விடாமல். படிப்பு ரீதியாக குழந்தைகளுக்கு வழி நடத்திச் செல்ல வேண்டும் என்றார்.