கிணற்றில் தவறி விழுந்த 13 காட்டுப்பன்றிகளைத் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்ன சமுத்திரம் காவாபட்டறை பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் நந்தகுமார். இவருக்குச் சொந்தமாக 30 அடி அளவிலான விவசாய கிணறு உள்ளது. இந்நிலையில் அருகே உள்ள காப்புக் காட்டில் இருந்து காட்டுப் பன்றிகள் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்துள்ளது. அப்போது திடீரென நந்தகுமாரின் விவசாய கிணற்றில் 13 காட்டுப் பன்றிகள் தவறி விழுந்துள்ளன. இதனை அறிந்த நந்தகுமார் இந்த சம்பவம் குறித்துத் திருப்பத்தூர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.
இந்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு நிலைய அலுவலர் தசரதன் தலைமையில் சரவணன், கோகுல்ராஜ், வைகுந்தவாசன், ஸ்ரீகாந்த் ஆகிய தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கிணற்றுக்குள் விழுந்த காட்டுப் பன்றிகளைச் சிறிது நேரம் போராடி பத்திரமாக மீட்டனர். மேலும் மீட்கப்பட்ட காட்டுப் பன்றிகளை அருகே உள்ள காப்புக் காட்டுக்குள் விட்டனர். தண்ணீர் தேடி வந்த 13 காட்டுப் பன்றிகள் கிணற்றில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.