திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (47). இவர் அங்குள்ள பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஜோதி (29, பெயர் மாற்றப்பட்டுள்ளது), என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
இதற்கிடையே, கடந்த 4ஆம் தேதி பென்னாலூர்பேட்டை அருகே உள்ள வல்லூர்புரம் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலை அறிந்து, பென்னாலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த போது, அங்கு சடலமாக கிடந்தது சீனிவாசன் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து, சீனிவாசனின் மனைவி ஜோதியிடம் விசாரித்த போது, தனது கணவர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து, போலீசார் சீனிவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சீனிவாசன் உடலை பிரேத பரிசோதனை செய்ததன் பேரில் வெளிவந்த மருத்துவ அறிக்கையில், சீனிவாசனின் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து, ஜோதியிடம் விசாரித்த போது அவர், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதில் சந்தேகமடைந்த, காவல் ஆய்வாளர் ஏழுமலை மற்றும் போலீசார், ஜோதியிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், ஜோதிக்கும், பென்னாலூர்பேட்டை பகுதியில் வசிக்கும் குமாருக்கும் (24) பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுடைய பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இந்த விவகாரம் சீனிவாசனுக்கு தெரிந்ததும், ஜோதியை பலமுறை கண்டித்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் விரக்தியடைந்த ஜோதி தனது ஆண் நண்பரான குமாருடன் சேர்ந்து சீனிவாசனை கொலை செய்ய திட்டுமிட்டுள்ளனர். அதில் சம்பவத்தன்று மாலை சீனிவாசனை குமார் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று அளவுக்கு அதிகமாக மது வாங்கி கொடுத்துள்ளார்.
சீனிவாசன் மது போதையில் இருந்தபோது, அங்கு வந்த ஜோதி,குமாருடன் சேர்ந்து துப்பட்டாவால் கணவர் சீனிவாசனின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். அதன் பின்னர், மது போதையில் கணவர் இறந்துவிட்டதாக ஜோதி நாடகம் ஆடியது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜோதி மற்றும் குமார் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.