Skip to main content

திருமணத்தை மீறிய உறவு; ஆண் நண்பனுக்காக கணவனைக் கொன்ற மனைவி

Published on 28/07/2023 | Edited on 28/07/2023

 

wife who incident her husband along with her boyfriend
சுந்தர்ராஜ் - கவிதா - தினேஷ்

 

திருமணத்தை மீறிய உறவுக்குத்  தடையாக இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து கொண்டு  கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.     

 

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள மலையம்பாளையத்தைச் சேர்ந்தவர் அர்த்தனாரீஸ்வரன். இவருடைய மகன் சுந்தர்ராஜ் (32).  நெசவுத் தொழிலாளி. இவருடைய மனைவி கவிதா (27) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்குத் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகின்றன. இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் கூலி வேலை செய்து வந்த சுந்தர்ராஜ், திடீரென்று அல்சர் நோயால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக  ஜலகண்டாபுரம் திரும்பியவர், அதன்பின் சொந்த ஊரிலேயே இருந்து விட்டார். மீண்டும் அவர் நெசவுத்தொழிலில் ஈடுபட்டு வந்தார்.     

 

இந்த நிலையில், ஜூலை 17 ஆம் தேதி, அதிகாலை 4 மணியளவில், வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சுந்தர்ராஜ் சடலமாகக் கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ந்து போன கவிதா, பெங்களூரு சென்றிருந்த கணவரின் தந்தை அர்த்தனாரீஸ்வரனுக்கு அலைபேசி மூலம் தகவல் அளித்தார். இதைக்கேட்டு பதறிப்போன மாமனார், தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் சொந்த ஊர் திரும்பினார். மகனின் சடலத்தைப் பார்த்து கதறித் துடித்தனர். இதுகுறித்து சுந்தர்ராஜின் தந்தை அர்த்தனாரீஸ்வரன் ஜலகண்டாபுரம் காவல்நிலையத்திற்குத் தகவல் அளித்தார். தன் மகன் அல்சரால் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தான். அதனால் அவன் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம். எங்களுக்கு அவனுடைய சாவில் எந்த சந்தேகமும் இல்லை என அர்த்தனாரீஸ்வரன் சொல்லி இருக்கிறார். 

 

இதையடுத்து காவல்துறையினர், சுந்தர்ராஜ் தற்கொலை செய்து கொண்டதாக சிஆர்பிசி சட்டப்பிரிவு 174ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். காவல் ஆய்வாளர் ஆனந்தராஜ் மற்றும் காவலர்கள் சடலத்தைக் கைப்பற்றி, சேலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.  உடற்கூராய்வில் சுந்தர்ராஜின் மரணத்தில் உள்ள மர்மம் விலகியது. தூக்கிட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் கழுத்து இறுக்கப்பட்டு இருக்கும்; நாக்கு வெளியே அல்லது உள்ளேயே துருத்திக் கொண்டிருக்கும். உடல் கழிவு வெளியேறி இருக்கும். ஆனால் இதுபோன்ற  அடிப்படையான அறிகுறிகள் எதுவும் உடலில் தென்படவில்லை. அதேநேரம் அவர் மூச்சுத்திணறி இறந்து இருப்பதற்கான தடயங்களைக் கூராய்வு செய்த தடய அறிவியல் மருத்துவர்கள் கண்டறிந்தனர். தங்கள் சந்தேகத்தை அவர்கள் காவல்துறையினருக்குத் தெரிவித்தனர்.     

 

இதையடுத்து, இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்கும்படி, ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா, ஜலகண்டாபுரம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜ்  ஆகியோருக்கு எஸ்பி சிவக்குமார் உத்தரவிட்டார். முதலில், சுந்தர்ராஜின் மனைவி கவிதாவிடம் இருந்து விசாரணையைத் தொடங்கினர். அவருடைய அலைபேசியை கைப்பற்றி ஆய்வு  செய்தனர். கவிதா, கடந்த நான்கு மாதமாக ஆவடத்தூர் அருகே உள்ள கட்டிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தினேஷ் (24) என்ற இளைஞருடன்  அதிக நேரம் பேசியதும், அடிக்கடி பேசி வந்திருப்பதும் தெரிய வந்தது. இதனால், அவர்களுக்குள் திருமணத்தை மீறிய உறவு இருக்கலாம் எனச் சந்தேகம் கொண்ட காவல்துறையினர், கவிதா மூலமாகவே தகவல் அளித்து தினேஷையும் வரவழைத்தனர். இருவரிடமும் காவல்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அவர்கள் இருவரும் சேர்ந்து சுந்தர்ராஜை கொலை செய்துவிட்டு, சடலத்தை தூக்கில் கட்டி தொங்கவிட்டு, கணவர் தற்கொலை செய்து  கொண்டதாகச் சித்தரித்ததாக ஒப்புக்கொண்டனர்.     

 

கவிதாவின் பள்ளிக்கால தோழியான ஜலகண்டாபுரம் மாதர் சங்க தெருவில் வசிக்கும் செந்தில்குமார் என்பவரின் மனைவி சத்யா (27)  என்பவருக்கும் இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அதையடுத்து சத்யாவையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். அவரும் சுந்தர்ராஜ் கொலை செய்யப்பட்டதையும், கொலைக்கான சதித்திட்டத்தில் தனக்கு பங்கு இருந்தது என்றும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து கவிதா, அவருடைய ஆண் நண்பர் தினேஷ், தோழி சத்யா ஆகிய மூவரையும் காவல்துறையினர் ஜூலை 26 ஆம் தேதி கைது செய்தனர். மூன்று பேரிடமும் நடத்திய விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

 

அவர்கள் தனித்தனியாக அளித்த வாக்குமூலம் குறித்து காவல்துறையினர் நம்மிடம் சில விவரங்களைப் பகிர்ந்து கொண்டனர். பெங்களூருவில் வேலை செய்து வந்த சுந்தர்ராஜ், உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சொந்த ஊருக்கே திரும்பி வந்துவிட்டார். அப்போது அவருடைய குடும்பம் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு வந்துள்ளது. இதனால் கவிதா, உள்ளூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு ஆசிரியர் வேலைக்குச் சென்று வந்துள்ளார். தனது பள்ளிக்காலத் தோழியான சத்யா என்பவரும் அதே பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார்.  தோழி சத்யா மூலமாக, கட்டிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தறிப்பட்டறை தொழிலாளி தினேஷ் அறிமுகம் ஆகியுள்ளார். இதன்பிறகு,  கவிதாவும், தினேஷூம் அடிக்கடி அலைபேசியில் இரவு, பகல் பாராமல் பேசி வந்துள்ளார்கள். நீண்ட நேரம் வாட்ஸ்ஆப்பில் சாட்டிங் செய்து வந்துள்ளனர். இந்தப் பழக்கம் அவர்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. பலமுறை இருவரும் நேரில் சந்தித்து தனிமையில் இருந்துள்ளனர். இவை குறித்தெல்லாம் அரசல் புரசலாகத் தெரிந்து கொண்ட சுந்தர்ராஜ், மனைவி கவிதாவைக் கண்டித்துள்ளார். அத்துடன், அவரிடம் இருந்த அலைபேசியையும் பறித்துக் கொண்டார். இதன் பிறகும் தினேஷூடன் பேசுவது தெரிய வந்தால், வேலைக்குச் செல்வதையும் நிறுத்தி விடுவேன் என்றும் சுந்தர்ராஜ் எச்சரித்ததோடு, மனைவியின் போக்கை ரகசியமாகக் கண்காணிக்கவும் ஆரம்பித்தார்.  

 

சுந்தர் ராஜால் தனது சுதந்திரம் பறிபோனதாகக் கருதிய கவிதா, அவரை தீர்த்துக்கட்டினால்தான் தன்னால் நிம்மதியாக வாழ முடியும் என முடிவு செய்தார். தனது திட்டம் குறித்து தினேஷ், தோழி சத்யா ஆகியோரிடமும் கூறினார். அவர்களும் சுந்தர்ராஜை போட்டுத்தள்ள எல்லா வகையிலும் உதவி செய்வதாக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, கொலைத் திட்டத்தை அரங்கேற்றுதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில்தான், ஜூலை 17 ஆம் தேதி, ஆடி மாதப் பிறப்பையொட்டி கணவரின் தந்தையும், தாயாரும் பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டுக்குக் கிளம்பிச் சென்றுள்ளனர். இதுதான் சரியான தருணம் எனக்கருதிய கவிதா, அன்று இரவு கணவர் சுந்தர்ராஜூக்கு பாலில் தூக்க மாத்திரைகள் கலந்து கொடுத்து தூங்க வைத்துள்ளார். அன்று இரவு தனது ஆண் நண்பர் தினேஷை வீட்டிற்கு வரவழைத்தார் கவிதா. இருவரும் சேர்ந்து, அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சுந்தர்ராஜை தலையணையால் முகத்தில் வைத்து அழுத்தி, மூச்சுத்திணறலை ஏற்படுத்திக் கொலை செய்துள்ளனர். குட்டு வெளிப்பட்டு விடாமல் இருக்க, சுந்தர்ராஜ் தற்கொலை செய்து கொண்டதுபோல் சித்தரிக்கும் விதமாக சடலத்தை தூக்கில் கட்டித்  தொங்கவிட்டுள்ளனர். கொலைத் திட்டத்தை நிறைவேற்றிய பிறகு தினேஷை அங்கிருந்து அனுப்பி வைத்த கவிதா, எதுவும் தெரியாததுபோல்  அதிகாலையில் எழுந்து கணவரின் சடலத்தைப் பார்த்துக் கதறி அழுது கூச்சல் போட்டுள்ளார்.     

 

ஏற்கனவே சுந்தர்ராஜ், அல்சரால் வயிற்று வலி தாங்க முடியவில்லை என அடிக்கடி புலம்பி வந்தது மாமனார், மாமியார், அக்கம்பக்கத்தினருக்கும் தெரியும். தீராத வயிற்று வலியால் ஏற்பட்ட விரக்தியால்தான் சுந்தர்ராஜ் தற்கொலை செய்து கொண்டதாக அனைவரையும் நம்ப வைத்து விட்டார் கவிதா. மருமகளின் பேச்சை வெள்ளந்தியாக நம்பிய சுந்தர்ராஜின் பெற்றோரும், இதே  காரணத்தைதான் காவல்துறையினரிடமும் கூறியுள்ளனர்.  எல்லாம் சுபமாக முடிந்து விடும் என்று கவிதா, ஆண் நண்பர் தினேஷ், தோழி சத்யா ஆகியோர் நம்பிக் கொண்டிருந்த நிலையில், உடற்கூராய்வில் எந்தத் தடயத்தையும் மறைக்க முடியாது என்பதை கொஞ்சமும் அறிந்திருக்கவில்லை. உடற்கூராய்வில் ஏற்பட்ட சந்தேகம், அவர்கள் மூவரையும் கம்பி எண்ண வைத்துவிட்டது. 

 

இதையடுத்து காவல்துறையினர், தற்கொலை வழக்கைக் கொலை வழக்காக மாற்றிப் பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட கவிதா, தினேஷ், சத்யா ஆகியோரைக் காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர். ஆண் நண்பர் மற்றும் தோழியுடன் சேர்ந்து மனைவியே கணவனைக் கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய சம்பவம் ஜலகண்டாபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்