
ஈரோடு பழைய கார வீதி முதல் தெருவை சேர்ந்தவர் 24 வயது சுசீந்திரன். மூன்று வருடங்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த ஒரு பெண்ணை சுசீந்திரன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
கணவன், மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி குடும்ப சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் சுசீந்திரன் மனைவி அவரிடம் கோபித்துக் கொண்டு அவ்வப்போது அவரின் தாயார் வீட்டுக்குச் சென்றுவிடுவார். அப்படித்தான் சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் சண்டை ஏற்பட்டு அவரின் தாயார் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
இந்த நிலையில், சுசீந்திரனின் மனைவி அவரது குடிப்பழக்கத்தைக் காரணம் காட்டி அவருடன் வாழப் பிடிக்கவில்லை என வக்கீல் மூலம் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ஏற்கனவே மனைவி, குழந்தைகளைப் பிரிந்த சோகத்தில் இருந்த சுசீந்திரன் விவாகரத்து நோட்டீசால் மேலும் அதிர்ச்சி அடைந்தார். இதனால் விரக்தியில் இருந்த சுசீந்திரன் 9ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.