Skip to main content

“பொங்கலை குறி வைப்பது ஏன்?” - சு. வெங்கடேசன் எம்.பி. காட்டம்!

Published on 20/12/2024 | Edited on 20/12/2024
Why mark Pongal Su Venkatesan MP

பொங்கல் அன்று யுஜிசி - நெட் (UGC - NET) தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலை அன்றைய தினம்  நடைபெற உள்ள தேர்வின் தேதியை மாற்ற வேண்டும் என மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது  தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் , “மத்திய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலைக் குறி வைப்பது ஏன்?. மத்திய அரசின் கீழ் உள்ள தேர்வு முகமைகள் அறிவிக்கிற பல தேர்வுகள் பொங்கல் விடுமுறை நாட்களில் அறிவிக்கப்படுவது தொடர்கதை ஆகிவிட்டது.

கடந்த மாதம் தான் பொங்கல் திருநாள் அன்று அறிவிக்கப்பட்டிருந்த பட்டய கணக்காளர் (CA) தேர்வு தேதியைப் போராடி மாற்றினோம். இப்பொழுது மீண்டும் இன்னொரு அறிவிப்பு வந்துள்ளது. தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ள, ‘யுஜிசி - நெட்’ தேர்வு அட்டவணையில் 30 பாடங்கள் மீதான தேர்வுகள் ஜனவரி 15, 16 தேதிகளில் வருகிறது. ஜனவரி 14 அன்று பொங்கல், ஜனவரி 15 திருவள்ளுவர் தினம், ஜனவரி 16 உழவர் திருநாள் எனத் தொடர் விடுமுறை இருந்தும் மேற்கண்ட தேதிகளில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொங்கல் காலம் என்பது தமிழர்களுடைய பண்பாட்டோடு, உழவர் பெருமக்களின் உணர்ச்சிப்பூர்வமான கொண்டாட்டத்தோடும் தொடர்புடையதாகும். ஆகவே இந்த தேதிகளில் தேர்வுகள் நடத்தப்படுவது மிகப்பெரும் சிரமங்களை தங்களுக்குத் தரும் என்று தேர்வர்களும், பெற்றோர்களும் என்னைத் தொடர்பு கொண்டு தலையீட்டை நாடி உள்ளனர். ஆகவே இந்தத் தேர்வு தேதிகளை மாற்றுமாறு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும், தேசிய தேர்வு முகமை பொது இயக்குநர்  பிரதீப் சிங் கரோலாவுக்கும் கடிதங்களை எழுதி உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.  
 

சார்ந்த செய்திகள்