Skip to main content

'யார் அந்த சார்?; நேர்மையான விசாரணை தேவை'-திருமாவளவன் பேட்டி

Published on 02/01/2025 | Edited on 02/01/2025
 'Who is that sir?; An honest investigation is needed'-Thirumavalavan interview

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரித்த நிலையில், 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிட்டது.

இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ''அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தில் யார் அந்த சார்? என்பது தொடர்பாக நேர்மையான விசாரணை தேவை. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அவ்வப்போது நடந்துள்ள சூழலில் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி அவ்வப்போது தமிழ்நாடு அரசுக்கு சுட்டிக்காட்டி இருக்கிறோம். வேண்டுகோள் விடுத்து இருக்கிறோம். அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வல்லுறவு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி கைது செய்யப்பட்டிருந்தாலும் கூட, அந்த குற்றச்செயல் பெரும் அதிர்ச்சியை வேதனையை உருவாக்கி இருக்கிறது.

 'Who is that sir?; An honest investigation is needed'-Thirumavalavan interview

பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்க அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இந்த வழக்கை பொறுத்தவரையில் கைது செய்யப்பட்ட நபரை தாண்டி ஒரு சிலர் அதில் ஈடுபட்டிருக்க கூடும் என்ற சந்தேகம் வலுவாக உள்ளது. ஆகவே அரசு குறிப்பாக காவல்துறை நேர்மையான முறையில் புலன் விசாரணை நடத்தி குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட நபருக்கு உடனடியாக பிணை வழங்கக் கூடாது. அவரை சிறையில் வைத்து அப்படியே புலன் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கு விசாரணை முடித்து தண்டனை வழங்க வேண்டும் என்று விசிக வலியுறுத்துகிறது'' என்றார்.

அப்போது செய்தியாளர்கள் இந்த சம்பவத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து திருமாவளவன், ''இந்த சம்பவம் குறித்து போராட்டங்கள் நடைபெற்று இருக்கின்றன. முற்றாக அனுமதி மறுக்கப்படவில்லை. இதே பிரச்சனைக்கு பலர் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தி இருக்கிறார்கள். ஆனால் இதை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்று சிலர் உள்நோக்கத்தோடு செயல்படுவதனால் அரசு இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அணுகுவதாக தெரிகிறது. எதுவாக இருந்தாலும் எதிர்க்கட்சிகளுக்கு போராடுவதற்குரிய வாய்ப்பை வழங்க வேண்டும். அனுமதி வழங்க வேண்டும் என்பதுதான் எங்கள் வேண்டுகோள்'' என்றார்.

சார்ந்த செய்திகள்