ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் தலைவர் மற்றும் துணைத் தலைவரை மறைமுக தேர்தல் மூலமாக அக்டோபர் 22- ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் 13 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்கள் அனைத்திலும் தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சியுமே வெற்றி பெற்று இருந்தது. இந்த நிலையில், இந்த மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி பொதுப் பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தி.மு.க.வுக்கு அதிக உறுப்பினர்கள் இருந்ததால், எந்த கட்சியும் தி.மு.க.வை எதிர்த்து போட்டியிட முன் வரவில்லை. அதைத் தொடர்ந்து, தலைவர் பதவிக்கு வேட்பு மனுவைத் தாக்கல் செய்த தி.மு.க.வைச் சேர்ந்த ஜெயந்தி திருமூர்த்தி மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு வேட்பு மனுவைத் தாக்கல் செய்த நாகராஜ் இருவரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்டத்திலுள்ள 7 ஒன்றியங்களில் 6 ஒன்றியங்களில் மட்டும் தேர்தல் நடைபெற்றது. அதில் கீழ்க்கண்டவர்கள் ஒன்றியக்குழு தலைவர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
திமிறி - அசோக்,
அரக்கோணம் - நிர்மலா,
வாலாஜாபேட்டை - சேஷா.வெங்கட்,
காவேரிப்பாக்கம் - அனிதாகுப்புசாமி,
சோளிங்கர் - கலைக்குமார்,
ஆற்காடு - புவனேஸ்வரி.
இவர்கள் அனைவரும் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நெமிலி ஒன்றியத்தில் தவறான அறிவிப்பு எனச் சொல்லித் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி வரும் அக்டோபர் 30- ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.