சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனை தமிழக அரசு விரைவில் கண்டுபிடித்து மக்கள் முன் நிறுத்த வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் மன்றத்தில் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அரயில் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், ''முகிலன் காணாமல்போய் 10 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. அவரை தமிழக அரசு கண்டுபிடிக்க வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசும், காவல்துறையும் என்ன முயற்சி எடுத்திருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு அறிவிக்க வேண்டும்'' என்றும், மேலும் முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி வரும் மார்ச் 2ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர்.
அதன்படி இன்று சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, மகேந்திரன், தியாகு, கொளதமன், திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ''முகிலன் எங்கே? முகிலன் பற்றிய உண்மையை தமிழக அரசு மக்களிடம் மறைக்கக் கூடாது'' என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன.