தமிழ்நாடு முழுவதும் கோடிக்கணக்கில் இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் நேரத்தில் வேலை வாய்ப்புகளை தட்டிப் பறிக்கும் வகையில், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு புதன்கிழமை அன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத்தலைவர் ஆர்.ரெத்தினவேல் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் என்.ராஜசேகர் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். வட்ட துணைச்செயலாளர் முத்துக்கிருஷ்ணன், கோட்டப் பொருளாளர் செந்தில்குமார், சசிகலா, சங்கீதா உள்ளிட்ட 18 பேர் கலந்து கொண்டனர். நிறைவாக வட்டப் பொருளாளர் மருததுரை நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், "தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் வகையில், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை மீண்டும் பணியமர்த்தக் கூடாது. அரசு ஏற்கனவே கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தரவேண்டும். விவசாயிகளை பாதிக்கும் இ அடங்கல் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது. இ-அடங்கல் திட்டத்தை போதிய உபகரணங்கள் இன்றி கொண்டு வரக்கூடாது. வாட்ஸ் அப்பில் நிர்வாகம் செய்யக் கூடாது" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.