திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டத்துக்குள் வருகிறது நெக்னாமலை. இந்த மலை கிராமத்தில் 200க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்துக்கு செல்ல சாலை வசதியில்லை. வனத்துறையோ சாலை அமைக்க அனுமதி மறுக்கிறது. இதனால் கரடுமுரடான பாதையில் தட்டுதடுமாறி இருசக்கர வாகனங்கள் மட்டும் ஓட்டி செல்கின்றனர். வேறு வாகனங்கள் செல்ல முடிவதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
இதுப்பற்றி மாவட்டம் முதல் மாநிலம் வரையிலும் கோரிக்கை மனு அனுப்பிவிட்டனர். எம்.பி, எம்.எல்.ஏக்களிடமும் கோரிக்கை வைத்துவிட்டனர். பிரச்சனை இதுவரை தீரவில்லை.
இந்நிலையில் டிசம்பர் 9ந்தேதி நெக்னாமலையை சேர்ந்த முனுசாமி. இவர் தனது குடும்பத்தினருடன் கோவையில் வசித்து வருகிறார். அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். வேலை செய்த இடத்தில் மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளார். அவரது உடல் ஆம்பூர் வரை வாகனத்தில் கொண்டு வந்துள்ளனர். அதன்பின் வாகனம் மலைக்கு செல்லாது என்பதால் அந்த கிராமத்தை சேர்ந்தவர்களும், இறந்தவர்களின் உறவினர்களும் மலையடிவாரத்துக்கு வந்து அவரது உடலை நீண்ட சவுக்கு கம்பில் அவரது உடலை கம்பளி போட்டு சுத்தி மலைமேலே கொண்டு சென்றனர்.
அந்த உடலோடு 7 மாத கர்ப்பிணியாக உள்ள இறந்தவரின் மனைவியும் நடந்து சென்றார். இந்த தகவல் தற்போது வெளியாக பெரும் சோகத்தை ஏற்படுத்திவிட்டது. அனைத்திலும் முன்னிலையில் உள்ள தமிழகம் என பீற்றிக்கொள்கிறோம். ஆனால், ஒரு கிராமத்துக்கு சாலை வசதி கூட செய்து தர முடியாத நிலையில் இன்றைய ஆட்சியாளர்கள் உள்ளார்கள் என்பது வெட்ககேடானது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.