




அண்மையில் திமுக பேச்சாளர் சைதை சாதிக் பாஜக பெண் நிர்வாகிகள் குறித்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மகளிர் அணி சார்பில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக பேச்சாளரின் கருத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாஜக மகளிர் அணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்ட நிலையில், அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதாக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அங்கு போராட்டம் நடத்திய பாஜக மகளிர் அணி நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
அப்பொழுது கைது செய்து பேருந்தில் ஏற்றப்படும்போது செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, ''திராவிட மாடல் அரசின் சாதனையைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். பெண் நிர்வாகிகள் குறித்துத் தவறாகப் பேசியவருக்குத் தண்டனை இல்லை. ஆனால் அதை எதிர்த்துக் கேட்ட பாஜகவினரை கைது செய்வதை பாஜக கடுமையாகக் கண்டிக்கிறது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எங்கள் நிர்வாகிகள் மீது அல்ல. பல சர்வாதிகாரிகளைப் பார்த்துவிட்டோம் இதையும் பார்ப்போம்'' என்றார்.