சென்னை இராஜீவ் காந்தி அரசுப் பொதுமருத்துவமனையில் ரத்தம் கையிருப்பு முழுவதுமாகத் தீர்ந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருக்கும் நிலையில் ரத்தம் கையிருப்பு பற்றாக்குறை நிலையை சமன்படுத்த ரத்த தானம் செய்யக்கோரி கட்சியினருக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தலில் அறிக்கைவெளியிடப்பட்டுள்ளது அந்த அறிக்கையில்.
சென்னை, மத்திய தொடர்வண்டி நிலையம் அருகே அமைந்துள்ள இராஜீவ் காந்தி அரசுப் பொதுமருத்துவமனையில் குருதியின் கையிருப்பு முழுவதுமாகத் தீர்ந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தற்போது அறிவித்திருக்கிறது இதனால், நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்ய குருதியின்றி மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையினைப் போக்க நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பாசறை தனது பங்களிப்பைச் செலுத்த விழைகிறது. எனவே, நம் இரத்த உறவுகளைக் காக்க நம் இரத்தத்தினைக் கொடையாகத் தர அணியமாவோம்!
ஆதலால், இன்றுமுதல் நாம் தமிழர் உறவுகள் இராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனைக்குச் சென்று குருதிக்கொடை செய்யுமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டப் பொறுப்பாளர்களும், தொகுதிப் பொறுப்பாளர்களும் இணைந்து இப்பெரும் பணியினை முன்னெடுக்குமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது.