அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு தொடர்பான புகார் அடிப்படையில், வழக்குப் பதிவுசெய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி அன்று அவருக்கு சொந்தமான மற்றும் அவருக்குத் தொடர்புடைய 26 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதையடுத்து, சென்னை ஆலந்தூரில் உள்ள தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையின் தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு நேற்று (25/10/2021) நேரில் ஆஜரானார். அதைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக இன்றும் ஆஜரான முன்னாள் அமைச்சரிடம், சுமார் நான்குமணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், "வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிக்கவில்லை. விசாரணையின்போது தேவையான ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் சமர்ப்பித்தேன். கணக்கில் வராத பணம் வைத்திருக்கவில்லை; அனைத்திற்குமே கணக்கு இருக்கிறது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பைத் தந்தேன்; காவல்துறையினர் எந்த நெருக்கடியும் தரவில்லை" என்றார்.