காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார். மேலும், அங்குள்ள அண்ணாவின் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''கரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில் காஞ்சிபுரத்திற்கு வருகைதந்து அறிஞர் அண்ணாவுடைய இல்லத்தில், அவர் வாழ்ந்த இல்லத்தில் வாழ்த்து பெற வேண்டும் என்று நான் கருதிக்கொண்டிருந்தேன். அதற்கான வாய்ப்பு இன்று எனக்கு கிடைத்துள்ளது. எனவே அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு எங்களை ஆளாக்கிய, கழகத்தை உருவாக்கிய அறிஞர் அண்ணா வாழ்ந்த இல்லத்திற்கு வருகை தந்து அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
அவருடைய இல்லத்திற்கு வந்திருக்கக்கூடிய இந்த நேரத்திலே குறிப்பேடு புத்தகத்தில் கூட நான் எழுதியிருக்கிறேன் 'மக்களிடம் செல்; மக்களோடு மக்களாக சேர்ந்து வாழ்; மக்களுக்குப் பணியாற்று' என்ற அறிவுரையைத் தம்பிமார்களுக்கு எப்போதும் அவர் வழங்கிக்கொண்டிருப்பவர். எனவே அதை நினைவுபடுத்தி குறிப்பேடு புத்தகத்திலேயே அவர் தந்த அறிவுரைப்படி ஆட்சி வெற்றிநடை போடும் என்று உறுதியோடு தெரிவிக்கும் வகையில் நான் அதை எழுதியிருக்கிறேன்'' என்றார்.
முதல்வரான பிறகு முதன்முறையாக காஞ்சிபுரம் சென்றுள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தகுந்தது.