டிடிவி தினகரனையும் அவரைச் சார்ந்தவர்களையும் ஒருபோதும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள முடியாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“நீதிமன்றத்தின் தீர்ப்பை யாரும் விமர்சனம் செய்யக்கூடாது. ஆனால் அதுகுறித்து கருத்து கூறலாம். 18 எம்எல்ஏக்கள் வழக்கில், சபாநாயகர் உத்தரவு செல்லும் எனக்கூறிய தலைமை நீதிபதியின் தீர்ப்பைக் கருத்தில் கொள்ள வேண்டும். அதில், பேரவைத் தலைவருக்கு உள்நோக்கம் இல்லை, பேரவைத் தலைவருக்கு அதிகாரம் இருக்கின்றது, பேரவைத் தலைவரின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கூடாது என தலைமை நீதிபதி கூறியுள்ளார். இதுதான் அவரது தீர்ப்பின் முக்கிய சாராம்சம்.
அதனை முழுமையாக கவனத்தில் கொள்ள வேண்டும். வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும், துரோகங்கள் வென்றதாக வரலாறு இல்லை. துரோகம் வீழ்ந்ததாகவே வரலாறு உண்டு. இந்த அரசு 5 ஆண்டுகாலம் தொடர வேண்டும். அதிமுக அரசின் ஆட்சி நீடிக்க வேண்டும் என்று தான் மக்கள் விரும்புகிறார்கள். இதுதான் தொண்டர்களின் எண்ணம். இந்த எண்ணத்திற்கு மாறாக செயல்படுபவர்களை ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது.
இந்த தீர்ப்பால் மக்கள் துன்பப்படுவார்கள் என டிடிவி தினகரன் கூறியது ஒருவேளை பாகிஸ்தான் மக்களை குறிப்பிடுவதாக எடுத்துக்கொள்ளலாம். டிடிவி தினகரன் தரப்பு 18 எம்எல்ஏக்களும் எங்களுடன் இணைய விரும்பினால் அவர்களை சேர்த்துக்கொள்வது குறித்து கட்சி மேலிடம் முடிவெடுக்கும். யாரையும் புறந்தள்ள முடியாது. ஆனால், ஒருபோதும் டிடிவி தினகரனையும் அவரை சார்ந்தவர்களையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.