Skip to main content

ஊரெல்லாம் கடன் வாங்கி நாட்டுக்கு பெருமை சேர்க்க அனுப்புனோம்... அரசாங்கம் ஒரு வேலை கொடுக்க கூடாதா?

Published on 17/10/2019 | Edited on 17/10/2019

கடந்த 10  நாட்களுக்கு முன்பு மலேசியவில் உள்ள பினாங்கு மாநிலம் கெடா தீவில் நடந்த உலக சாம்பியன் சிலம்பாட்டப் போட்டியில் 10 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். பல நாட்டு வீரர்களும் அந்தந்த நாட்டு அரசாங்க செலவில் வந்து கலந்துகொண்ட நிலையில் இந்தியாவில் இருந்து 120 க்கும் மேற்பட்ட வீரர்கள் அதிலும் தமிழ்நாட்டில் இருந்து 80 வீரர் வீராங்கனைகள் அங்கே இங்கே கடன் வாங்கி நல்ல உள்ளங்களின் உதவியோடவும் போய் கலந்து கொண்டு அடுத்தடுத்து சிலம்பம்,  வாள் வீச்சு என்று தங்கம் வெள்ளிப் பதக்கங்களை வாங்கி குவித்து உலக சிலம்ப சாம்பியன் இந்தியா என்று தேசிய கொடியை உயர்த்திப் பிடித்து முகம் மலர்ந்தனர். ஆனால் இவர்களுக்கு இந்திய அரசாங்கமும், தமிழ்நாடு அரசாங்கமும் என்ன செய்தது என்பது தான் கேள்விக்குறி..

 

sports

 

இந்த 80 பேரில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள வேம்பங்குடி என்னும் சின்ன கிராமத்தில் டீ கடை நடத்தி வரும்  தன் தாய், தந்தை, உறவினர்கள் ஆங்காங்கே கடன் வாங்கி வீரமணிகண்டன் என்ற இளைஞரை அனுப்பி வைத்தனர். சீனியர் பிரிவில் ஒற்றை வாள் வீச்சில் தங்கமும் குழு போட்டியில் வெள்ளி என இருபதங்கங்களையும் வென்று தேசிய கொடியை உயர்த்திப் பிடித்தார்.

அந்த இளைஞர் சொந்த ஊருக்கு வந்தபோது தாய் தந்தையுடன் உறவினர்களும் மகிழ்ந்தனர். நம்ம ஊரு புள்ள நாட்டுக்கே பெருமை தேடி தந்துட்டேய்யா என்று கொண்டாடினார்கள்.

 

sports

 

வீரமணிகண்டன் நம்மிடம்.. நான் நமது தற்காப்பு கலையை கல்லூரியில் போய் தான் கத்துக்க தொடங்கினேன். எனக்கு தனியார் கல்லூரி நிர்வாகமும் பயிற்சியாளரும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தாங்க. அடுத்தடுத்து மாவட்ட, மாநில, தேசிய, ஆசிய போட்டிகளில் தொடர்ந்து பதக்கங்களை வாங்கி பயிற்சியாளருக்கான பட்டயத்தையும் வாங்கினேன். இப்ப உலக போட்டியிலும் வெற்றி பெற்றேன். ஆனா ஒரு அரசு வேலை தான் கிடைக்கல. நான் இப்ப பயிற்சியாளரா பலருக்கு பயிற்சி கொடுத்தாலும் தற்காப்புக் கலையான சிலம்பத்தையும் ஒலிம்பிக்ல சேர்த்தால் தான் செலவுகளையும் ஏற்கும் அரசு நல்ல வேலையும் கொடுக்கும் என்றார்.

கிராமத்தினரோ.. எங்க ஊரு புள்ள உலகப் போட்டிக்கு போறான்னு தெரிஞ்சதும் மகிழ்ச்சியடைஞ்சோம். ஊரெல்லாம் கடன் வாங்கி அனுப்புனாங்க. நாங்க நினைச்ச மாதிரி வெற்றி பெற்று இந்த நாட்டுக்கும் எங்க ஊருக்கும் பெருமை தேடி தந்துட்டான். ஆனா இந்த அரசாங்கங்கள் தான் இன்னும் இது போல ஜெயிச்சு வரும் புள்ளைகளை கண்டுக்கிறதே இல்ல. இவ்வளவு உழைச்சு ஜெயிச்சு வந்த வீரர்களுக்கு அரசாங்கம் ஒரு வேலையும், ஊக்கத் தொகையும் கொடுத்தால் நல்லாா இருக்குமே என்றனர்.

அரசாங்கம் நினைத்தால் வேலையும் கொடுக்கலாம் ஊக்கப்பரிசும் கொடுக்கலாம். இடைத்தேர்தல் முடிந்த பிறகாவது அரசாங்கம் நல்ல பதில் சொல்லும் என்று எதிர்பார்ப்போம்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

“உழவர்களுக்கு எதிரான அரசு வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை” - அன்புமணி கண்டனம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
  day when the anti-farmer government will fall is not far says Anbumani

கொள்முதல் நிலைய ஊழலை எதிர்த்ததற்காக கைது செய்வதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் ஊழல்களை தட்டிக் கேட்டதற்காக உழவர் சங்க நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உழவர்களின் உரிமைக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடிய அவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த மணி என்பவர் பாலாறு படுகை விவசாயிகள் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரும் அவருடன் இணைந்து உழவர்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 24 ஆம் நாள் படாளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த குற்றம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  உழவர்களிடமிருந்து மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதையும், அவ்வாறு கையூட்டு வாங்கும் சக்திகளுக்கு காவல்துறையினர் துணை போவதையும் கண்டித்து பல ஆண்டுகளாக குரல் கொடுத்தும், போராட்டம் நடத்தியும் வருவது தான்.

திமுக ஆட்சியில் இருந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  ஊழல் என்பது மட்டும் தீராத வியாதியாக தொடர்கிறது. படாளம், பழையனூர் ஆகிய கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்கச் செல்லும் உழவர்களிடம் மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து அந்த நிலையங்களுக்கு கடந்த மார்ச் 19 ஆம் தேதி சென்ற மணி, பரமசிவம் ஆகியோர் உழவர்களிடம் கையூட்டு பெறப்படுவது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால், அவர்களின் வினாக்களுக்கு விடை அளிக்காத நெல் கொள்முதல் நிலையப் பணியாளர் செல்வம் என்பவர், மணியும், பரமசிவமும் தம்மை மிரட்டியதாக படாளம் காவல்நிலையத்தில் மார்ச் 20&ஆம் தேதி புகார் அளித்தார். அதன் மீது மார்ச் 24&ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த படாளம் காவல்நிலைய அதிகாரிகள், அதன் பின் ஒரு  மாதத்திற்கும் மேலாகியும் எந்த விசாரணையும் நடத்தவில்லை; எந்த விதமான மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டம்  ஒழுங்கு சீர் கெட்டதையும், கையூட்டு வாங்கும் அதிகாரிகளுக்கு காவல்துறையினர் துணை நிற்பதையும் கண்டித்து கடந்த 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் மணி, பரமசிவம் உள்ளிட்டோர் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மணி, பரமசிவம் ஆகியோரை விசாரணை என்ற பெயரில்  படாளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், இருவர் மீதும் ஒரு மாதத்திற்கு முன் பதிவு செய்த வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். உழவர்களின் உரிமைக்காக போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்ததை விட கொடிய பழிவாங்கும் நடவடிக்கை இருக்க முடியாது. பழிவாங்கும் போக்கை கைவிட்டு, உழவர் சங்க நிர்வாகிகள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகம் உழவர்கள் தான். அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, நன்றி மறந்து உழவர்கள் மீது அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது. நிலவுரிமையை பாதுகாப்பதற்காக போராடிய மேல்மா உழவர்களை கைது செய்தும், அவர்களில் 7 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தும் கொடூர முகத்தைக் காட்டிய தமிழக அரசும், காவல்துறையும் இப்போது ஊழலை எதிர்த்து போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்து அதன் இன்னொரு முகத்தைக் காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதை மருந்து நடமாட்டம் போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவற்றிற்கு காரணமான  குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டிய தமிழக அரசு, அப்பாவி உழவர்களையும், கிளி சோதிடர்களையும், வெயிலின் தாக்கத்தை உணர்த்த சாலையில் ஆம்லேட் போட்ட சமூக ஆர்வலர்களையும் கைது செய்து கொண்டிருக்கிறது. இதிலிருந்தே தமிழ்நாட்டில் நடப்பது யாருக்கான அரசு என்பதை உணர முடியும்.

ஒட்டுமொத்த உலகிற்கும் உணவளிக்கும் கடவுள்களான உழவர்களை மதிக்காத எந்த அரசும் நீடித்தது இல்லை. அதற்கு உலகில் ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. தமிழ்நாட்டில் உழவர்களை மதிக்காத, அவர்களை பழிவாங்கும் திமுக அரசு தமிழ்நாட்டு மக்களால் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.