Skip to main content

உண்போருக்கு குளிர்ச்சியையும், உற்பத்தி செய்வோருக்கோ எரிச்சலையும் தந்திருக்கும் தர்பூசணி!

Published on 10/03/2018 | Edited on 10/03/2018
tharpoosani

 

கோடை வெய்யிலின் களைப்பை போக்கி குளிர்ச்சி தரும் தர்பூசணி விளைச்சலும், விலையும் குறைந்ததால் கடலூர் மாவட்ட விவசாயிகள்  வேதனை அடைந்துள்ளனர்.

 

கடலூர் மாவட்டம் திருமுட்டம் அருகே உள்ள சாவடிக்குப்பம், கொழை, அகரசோழத்தரம், உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில், சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குமட்டிக்காய் எனப்படும் தர்பூசணி சாகுபடி செய்து வருகின்றனர். கோடைக்காலத்தில் குளிர்ச்சி தர கூடியது என்பதால் தர்பூசணியை பொதுமக்கள் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர்.

 

 ஜனவரி  மாதம் நடவு செய்யப்படும் தர்பூசணி  மார்ச் மாதம் விளைச்சல் தர தொடங்கி ஜூலை மாதம் வரை ஐந்து மாதங்கள் காய் தர கூடியதாகும். தர்பூசணியை நடவு செய்வதற்கு, பார்கள் அமைத்து பார்களின் இரு கரைகளிலும் இரண்டு அடி இடைவெளியில் செடிகள்  நடவு  செய்யப்படுகிறது. நடவு செய்வது, பார்கள் அமைப்பது, உரம் இடுவது, ஆட்கள் கூலி என ஒரு ஏக்கருக்கு 25,000 வரை செலவிடப்படுகிறது. 

 

கடந்த காலங்களில்  ஒரு ஏக்கரில் சுமார் 10 டன் வரை தர்பூசணி காய்த்துள்ளது. அதேபோல் டன் ஒன்று 10,000 வரை விலை போயுள்ளது. இதன் மூலம் செலவுகள் போக ஏக்கருக்கு 70000 ரூபாய் வரை வருவாய் கிடைத்துள்ளது. இப்பகுதியில் விளைவிக்கப்படும் தர்ப்பூசணியை பெங்களூர், சென்னை, திருச்சி என பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் வயலுக்கே நேரிடையாக வந்து வாங்கி செல்வாரகள். ஆனால் இந்த ஆண்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தர்பூசணி விளைவிக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் அந்தந்த பகுதிகளில் வாங்கிக்கொள்கின்றனர். இதனால் வெளியூர் வியாபாரிகளின் வருகை வெகுவாக குறைந்துவிட்டது. அதனால் விலை சரிவடைந்து டன் 5000 ரூபாய் தான் போகிறது, அதேசமயம் நோய் தாக்குதலால், காய் பிடிப்பும், குறைந்துள்ளது.

 

விளைச்சலும் குறைந்து, விலையும் குறைந்துள்ளதால் விவசாயிகள் போட்ட முதலுக்கே மோசம் என வேதனையின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளனர்.

 

 பனிப்பொழிவால பூசணி பூக்கள் அழுகிடுது. மாத்தி மாத்தி மருந்து அடிச்சி பார்த்தாலும் காய் பிடிக்கல. பாதிக்கு பாதி கூட காய் பிடிக்கல. தேனி, திண்டுக்கல்னு அங்கங்க தர்ப்பூசணிசாகுபடி செய்றதால வெளியூர் வியாபாரிகள் வர்றதும் குறைஞ்சிடுச்சி. கடன் உடன வாங்கி சாகுபடி செய்தும் எந்த பிரயோசனும் இல்லை. போட்ட முதலும், உழைச்ச உழைப்பும் வீணாய் போய்ட்டுது” என விரக்தியில் புலம்புகிறார் அகர சோழத்தரம் விவசாயி செந்தில்.


 

உண்போருக்கு குளிர்ச்சியை கொடுப்பது தர்ப்பூசணி, ஆனால் அதை உற்பத்தி செய்வோருக்கோ எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

 
-    சுந்தரபாண்டியன் 

சார்ந்த செய்திகள்