
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டம், ராமியனஹள்ளியில் நடந்த குறிஞ்சி கூட்டுப் பண்ணை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதலாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்துக்கு, முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ் தலைமை வகித்துப் பேசினார், .
அப்போது அவர், “மத்திய அரசின் வேளாண் சட்டம் வெற்றி பெற்றால், விவசாயிகளைக் கார்பரேட்டுகள் அடிமையாக்குவர். விவசாயம், மாநிலப் பட்டியலில் உள்ளது. அது தொடர்பாக சட்டம் இயற்றுவதற்கு மத்திய அரசு என்ன அதிகாரம் உள்ளது. இதை, தமிழக முதல்வர் பழனிசாமி, நல்ல சட்டம் என எப்படி ஏற்றுக் கொள்கிறார்.
கரோனா காலத்தில், பொருளாதாரம் 23.9 சதவீதம் வீழ்ச்சி அடைந்தாலும், விவசாயம் 3.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும். அல்லது தனிச் சட்டத்தை, தமிழக அரசு இயற்ற வேண்டும்.
மக்கள் விவசாயக் கம்பெனியை, தமிழக அரசு உருவாக்கி, அதில் விவசாயிகளைப் பங்குதாரர்களாக ஆக்க வேண்டும். அப்போதுதான், விவசாயிகள் அடிமைகளாவது தடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.