வீட்டில் செல்லமாக வளர்த்த நாயை வீட்டை விட்டு அனுப்ப மனமில்லாமல் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை பெரிய நாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமி செட்டிப்பாளையம் ராஜலட்சுமி கார்டனை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் கவிதா (23). பட்டதாரி பெண்ணான கவிதா அதே பகுதியில் இருக்கும் தனியார் பத்திர அலுவலகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கவிதா இரண்டு ஆண்டுகளாக வீட்டில் ஒரு நாய் வளர்த்துள்ளார். அந்த நாய்க்குட்டி மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளார் கவிதா. அந்த நாய்க்குட்டிக்கு சீசர் என்று பெயர் சூட்டி செல்லமாக அழைத்து வந்துள்ளார் கவிதா. இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு அந்த பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்தது. மேலும் அப்போது இடி சத்தம் கேட்டு நாய் பயந்து குறைத்து கொண்டே இருந்துள்ளது.

அதே போல் தீபாவளி பண்டிகையின் போதும் பட்டாசு சத்தம் கேட்டு நாய் குறைத்து கொண்டே இருந்துள்ளது. இதனால் அருகில் வசிப்பவர்கள் நாய் சத்தத்தால் தூங்க முடியாமல் அவதிப்பட்டதாக சொல்லப்படுகிறது. பின்பு அருகில் வசிப்பவர்கள் கவிதாவின் தந்தையிடம் நாயை வேறு எங்கேயாவது கொண்டு விடுங்கள் என்று கூறியுள்ளனர். இதனால் கவிதாவின் தந்தை நாயை வேறு பகுதியில் விட்டு வர முடிவு செய்துள்ளார். இதற்கு கவிதா மறுப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. அதனால் கவிதாவை அவரது தந்தை திட்டியதாக கூறுகின்றனர். இதனால் மனவேதனை அடைந்த கவிதா மனவேதனையில் இருந்துள்ளார். அப்போது இரவு உணவு தனது குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளார். பின்பு வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பெரிய நாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது கவிதா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தை படித்த போலீஸாருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அந்த கடிதத்தில் அப்பா, அம்மா, பாட்டி, தம்பி எல்லோரும் நான் செல்லமாக வளர்த்த சீசரை நன்றாக பார்த்துகொள்ளுங்கள். எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும். வாரம், வாரம் கோவிலுக்கு போக வேண்டும். எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்கள் என்று எழுதி இருந்தார். பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட கவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.