கொள்முதல் செய்த மூட்டைகளிலிருந்து விளைபொருட்கள் திருடப்பட்டதால் விருத்தாசலம் வியாபாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திட்டக்குடி, தொழுதூர், நெய்வேலி, வேப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் தங்களின் விவசாய விளைபொருட்களை விற்பனை செய்ய கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வியாபாரிகள், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த எள்ளு மூட்டைகளில் இருந்து 40 கிலோ எள் திருடப்பட்டது. இதனால் அம்மூட்டைகளைக் கொள்முதல் செய்த வியாபாரிகள் விருத்தாசலம் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். ஆனால் காவல்துறையினர், வியாபாரிகள் அளித்த புகாரில் எவ்வித விசாரணையும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வியாபாரிகள் இன்று (26.08.2020) விவசாய விளை பொருட்களை கொள்முதல் செய்யாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது. பின்னர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் முன்னிலையில் காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன், காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் வியாபாரிகளுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். காவல் துறையினர் உரிய நபர்மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் வியாபாரிகள் போராட்டத்தைக் கைவிட்டு மீண்டும் விவசாயிகளின் விளை பொருட்களைக் கொள்முதல் செய்தனர்.