Skip to main content

தலைமை உத்தரவை மீறிய பிரமுர்கள்! நடவடிக்கை எப்போது? - கேள்வி கேட்கும் தொண்டர்கள்

Published on 11/03/2022 | Edited on 11/03/2022

 

Violators of the Chief Order! When is the action? party members Questioning

 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலில் தலைமை அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தலில் நின்று வெற்றி பெற்ற திமுக பிரமுகர்கள் அவர்களாகவே தங்களது பதவியினை ராஜினாமா செய்துவிட்டு என்னை வந்து சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டார் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின். சில இடங்களில் மட்டும் தலைமை அறிவித்த வேட்பாளர்களுக்குப் போட்டியாகவும், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆளும்கட்சி திமுக பிரமுகர்கள் பதவி விலகினார்கள். மற்ற இடங்களில் பதவி விலகவில்லை.

 

திருவண்ணாமலை திமுக வடக்கு மாவட்டம், சேத்பட் பேரூராட்சியில் 18 வார்டுகள். இதில் திமுக 10 இடங்களிலும், சுயேட்சைகள் 4 இடத்திலும், அதிமுக 2 இடத்திலும், காங்கிரஸ், பாமக தலா ஓரிடத்திலும் வெற்றி பெற்றது. யாருடைய ஆதரவும் இல்லாமல் திமுக தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியைப் பிடிக்கும் நிலையில் இருந்தது. பேரூராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டிருந்ததால் திமுக பேரூராட்சி செயலாளர் முருகன் தனது மனைவி சுதாவை முன்னிறுத்தினார். துணைத்தலைவர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த தொழிலதிபர் செல்வராஜ் மனைவி திலகவதி பெயரை முன்வைத்தனர். அமைச்சர் எ.வ.வேலு, திருவண்ணாமலை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தரணிவேந்தன் இவர்களையே தலைமைக்கு பரிந்துரை செய்தனர், தலைமையும் அந்தப் பெயர்களை அறிவித்தது.

 

மறைமுக தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திமுக செயலாளர் முருகன் மனைவி சுதா வெற்றி பெற்றார். அன்றைய தினம் மதியம் துணைத்தலைவர் தேர்தல் நடந்தபோது திமுக சார்பில் திலகவதி செல்வராஜ் வேட்புமனுதாக்கல் செய்துள்ளார். அதேநேரத்தில் சுயேட்சை கவுன்சிலர் மங்கலம் ரமேஷ், வேட்புமனுதாக்கல் செய்துள்ளார். மறைமுகத்தேர்தலில் திமுக தலைமை அறிவித்த வேட்பாளரைவிட போட்டி வேட்பாளர் 13 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் 5 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வி அடைந்தார். திமுக கவுன்சிலர்கள் இரண்டுபேர் சுயேட்சைக்கு வாக்களித்துள்ளனர்.

 

Violators of the Chief Order! When is the action? party members Questioning

 

இதுகுறித்து நம்மிடம் பேசிய திமுகவினர், இந்தப் பேரூராட்சியில் 3 கோஷ்டிகள் உள்ளன. அமைச்சர், மாவட்ட பொறுப்பாளர் முன்னிலையில்தான் பேச்சுவார்த்தை நடத்தி சேர்மன், வைஸ்சேர்மன் யார், யார் என முடிவு செய்யப்பட்டது. அதுவே அறிவிப்பாக வந்தது. தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக போட்டி வேட்பாளரை நிறுத்த முடிவு செய்தார்கள் கட்சி பிரமுகர்கள் சிலர். இப்படியொரு மூவ் நடப்பது குறித்து கவுன்சிலர் திலகவதியின் கணவர் செல்வராஜ், அமைச்சர் எ.வ.வேலு, மா.செ தரணிவேந்தனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக நிற்க இங்க யாருக்கு தைரியம் இருக்கு? அப்படியெல்லாம் நடக்காது, நான் பார்த்துக்கறன் என வாக்குறுதி தந்துள்ளார்கள் இருவரும்.

 

மறைமுக தேர்தலன்று காலை சேர்மன் தேர்தல் முடிந்ததும் சேர்மன் முருகன் கவுன்சிலர்களோடு தலைமறைவாகியவர், துணைத்தலைவர் வேட்பாளரை மட்டும் தனித்துவிட்டுட்டாங்க. அவர் ஆரணி, போளுர்ன்னு அலைஞ்சதுதான் மிச்சம். மதியம் மறைமுக தேர்தலுக்கு திமுக வேட்பாளர் - சுயேட்சையை கவுன்சிலர் என இரண்டு மனுக்கள் தாக்கலாகிறது. தேர்தல் முடிவில் சுயேட்சை கவுன்சிலர் வெற்றி பெற்றார். தேர்தலில் பல லட்சம் செலவு செய்த அவர் இந்த நம்பிக்கை துரோகத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் வேதனையில் புலம்பிவருகிறார் என்றார்கள்.

 

இதற்கு பின்னணி முழுக்க, முழுக்க சமூக அரசியல்தான். சமூக ரீதியாக களம்மிறங்கிய பேரூராட்சி செயலாளர் முருகன், திமுகவில் சீட் கிடைக்கவில்லையென சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று கவுன்சிலர்களானவர்களைத் தன்பக்கம் வைத்துக்கொண்டு தான்சார்ந்த சமூகம் மட்டுமே பேரூராட்சியில் பதவியில் இருக்கவேண்டுமென பேரூராட்சி தேர்தல் பொறுப்பாளரும், மாவட்ட துணைச் செயலாளருமான ராஜ்குமாருடன் இணைந்து தலைமை அறிவித்த வேட்பாளரைத் தோற்கடித்தார்கள்.

 

சேத்பட் பேரூராட்சி மட்டுமல்ல திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவத்திபுரம் நகராட்சியில் நகர்மன்ற தலைவர் பதவிக்கு, திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் வில்வநாதனுக்கு எதிராக ந.செ மோகனவேல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆரணி நகர்மன்ற துணைத்தலைவர் பதவி காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்டது. அங்கு திமுக கவுன்சிலர்கள் அதிமுக கவுன்சிலர் பாரி.பாவுக்கு வாக்களித்து வெற்றி பெறவைத்தார்கள்.

 

இப்படி தலைமையின் உத்தரவை மீறி இந்த மாவட்டத்தில் செயல்பட்டு பதவிக்கு வந்தவர்கள் மீது கட்சி தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிய இடங்களில் போட்டியிட்ட திமுக பிரமுகர்கள் மீது தலைமை நடவடிக்கை எடுத்தது. அதேபோல் பல மாவட்டங்களில், தலைமை உத்தரவுக்கு எதிராக சொந்த கட்சியினருக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் அப்படி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இதற்கு அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட பொறுப்பாளர் தரணிவேந்தன் என்ன சொல்லப்போகிறார்கள்? அல்லது அவர்கள் செய்த நம்பிக்கை துரோகத்துக்கு இருவரும் மறைமுகமாக சப்போர்ட் செய்கிறார்களா? எனக் கேள்வி எழுப்புகிறார்கள் பாதிக்கப்பட்ட கீழ்மட்ட நிர்வாகிகள்.

 

 

சார்ந்த செய்திகள்