விழுப்புரம் மாவட்டம், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஒட்டி உள்ளது விக்கிரவாண்டி. இங்குள்ள பள்ளி ஒன்றில் அக்கம் பக்கத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில், இங்குள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெற்றோரை இழந்த மாணவி தனது பாட்டியுடன் வசித்து வருகிறார். இவர் தனது கிராமத்திலிருந்து தினசரி விக்கிரவாண்டியில் உள்ள பள்ளிக்கு சென்று 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவனுடன் பழகி அது காதலாக மாறியுள்ளது. இருவரும் பள்ளி முடித்து வீட்டுக்கு புறப்படும் நேரத்தில் அவ்வப்போது தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர்.
நேற்று வீட்டுக்குச் சென்ற மாணவி தனது பாட்டியிடம் கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு கப்பியாம்புலியூர் அருகே உள்ள காப்பு காட்டில் தன்னை காதலிக்கும் மாணவனை சந்திக்க சென்றுள்ளார். அதேபோல் அந்த மாணவனும் தனது பெற்றோரிடம் நண்பர்களை பார்த்து வருவதாக கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். மாணவியும் மாணவனும் சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது திடீரென அவர்களை மூன்று பேர் கொண்ட கும்பல் சூழ்ந்து கொண்டது. அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி இருவரிடமும் இருந்த செல்போனையும் வெள்ளி செயினையும் பறித்துக் கொண்டதோடு, அந்த கும்பலில் இருந்த ஒருவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனைத் தடுக்க வந்த மாணவனின் தலையில் அந்த கும்பல் கத்தியால் வெட்டியதோடு அவரை சரமாரியாக தாக்கி புதரில் வீசியுள்ளனர். பின்னர் மாணவியை அவர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பி ஓடியதாக தகவல் பரவியது. ஆள்நடமாட்டமற்ற அந்தப் பகுதியில் அவர்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. அந்த மாணவியே மாணவனை அவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று மாணவனின் வீட்டுக்கு அருகே விட்டுள்ளார். சம்பவம் குறித்து அவர்களிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். எஸ்பி ஸ்ரீநாதா, டிஐஜி பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட அந்த கும்பலை பிடிக்க டிஎஸ்பி பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மாணவன், மாணவி இருவரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கும் மருத்துவ பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தனர். மேலும் தனிப்படை போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சம்பவம் நடந்த பகுதிக்கு பிரிந்து செல்லும் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அதன் பேரில் அந்த வழியாகச் சென்றவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், "இந்த சம்பவத்தில் 17 வயது சிறுவன் மற்றும் மாணவி இருவரும் ஒன்றாக கப்பியாம்புலியூர் ஏரிக்கரை அருகே தனிமையில் சென்றுள்ளனர். அப்போது மூன்று பேர் கொண்ட கும்பல் அவர்களை மடக்கி செல்போன், வெள்ளி செயின் ஆகியவற்றை பறித்துக் கொண்டு மாணவனை தாக்கியுள்ளனர் அந்த மூவரில் ஒருவர் மாணவியிடம் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். கூட்டு பாலியல் வன்கொடுமை நடைபெறவில்லை என அந்த மாணவி அளித்த வாக்குமூலத்தின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.