விழுப்புரம் மாவட்டம் சென்னை -புதுச்சேரி கடற்கரை சாலையில் மரக்காணம் அருகே உள்ளது எக்கியர்குப்பம். இந்த குப்பத்தில் வசிக்கும் மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர் தியாகு. இவரது மனைவி நிஷா. இவர்கள் இருவரும் நேற்று முன் தினம் தங்களது இருசக்கர வாகனத்தில் தங்கள் சொந்த பணிக்காக புதுச்சேரி சென்று விட்டு மீண்டும் தங்கள் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் அருகே இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்த போது இவர்களை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் வாகனத்தில் அமர்ந்திருந்த நிஷாவின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த நிஷா தனது செயினை கெட்டியாக இறுக பிடித்துக் கொண்டார். இதை பார்த்த கொள்ளையர்கள் நிஷாவை இருசக்கர வாகனத்தில் இருந்து இழுத்து கீழே தள்ள முயன்றனர். இதில் நிலை தடுமாறி நிஷா சாலையில் விழுந்ததில் தலையில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்து ஓடியது. அப்போதும் கொள்ளையர்கள் நிஷாவின் கழுத்தில் இருந்து தாலி செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றனர். இந்த சம்பவத்தின் போது நிஷாவின் கணவர் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் இந்த சம்பவத்தை பார்த்துவிட்டு தியாகு, நிஷா ஆகிய இருவரையும் மீட்டு மரக்காணத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பிறகு புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் நிஷாவின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டதோடு அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை தீவிரமாக தேடி வருகின்றனர். இதே போல் கோட்டகுப்பம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தவரை கத்தியால் வெட்டிவிட்டு அவரிடம் இருந்த செல்போன் பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றுள்ளனர்.