விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆகவும் கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி. ராமநாதன் சாத்தான்குளம் டி.எஸ்.பி.-யாக மாற்றம் செய்யப்பட்டுள்னர்.
தூத்துக்குடி எஸ்.பி.-யாக நியமிக்கப்பட்டுள்ள ஜெயகுமார் அக்ரி படிப்பு படித்துப் பட்டம் பெற்றவர். பிறகு குரூப் 1 தேர்வு மூலம் போலீஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட இவர், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் டி.எஸ்.பி. ஆக திறமையாக பணிபுரிந்தார். பிறகு சென்னை மாநகர போலீஸ் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் அடுத்து துணை கமிஷனர் என பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர். ரவுடிகள் ஒழிப்பு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று பெயர் பெற்றவர். சென்னையில் சட்டவிரோதமாக குட்கா தயாரிப்பு நடந்த இடத்தில் ரெய்டு நடத்தியவர். இதனால் அப்போதைய டி.ஜி.பி. .ஜார்ஜ் இவர் மீது கோபத்தில் இருந்தார். திறமையற்றவர் என்று குற்றம்சாட்டினார். அதன் பிறகு குட்கா ஊழல் வழக்குக் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் இவரிடமும் விசாரணை செய்தனர். இவர் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஆக பதவி ஏற்றது முதல் மனித நேயத்துடனும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் உறுதியுடனும் செயல்பட்டு வந்தார். கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையுடன் இணைந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தார்.
அதேபோல் கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி. ஆக இருந்த ராமநாதன் சாத்தான்குளம் டி.எஸ்.பி.-யாக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இவரும் விழுப்புரம் மாவட்டத்தில் இன்ஸ்பெக்டராக ஏற்கனவே பணி செய்தவர். பிறகு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்ஸ்பெக்டராக சிறப்பாக பணி செய்தவர். அதன் பிறகு பணி மாறுதல் செய்யப்பட்டு, பிறகு டி.எஸ்.பி. பதவி உயர்வு மூலம் கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி.-யாக நியமிக்கப்பட்டார். சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் மிகவும் கவனமாகவும் சமயோசிதமாகவும் செயல்படக் கூடியவர். மக்கள் மத்தியில் நல்ல அணுகுமுறையுடன் அன்பாகப் பேசக்கூடியவர். பழகக்கூடியவர். அப்படிப்பவரை சாத்தான்குளம் டி.எஸ்.பி.-யாக பணி மாறுதல் மாற்றப்பட்டுள்ளது கள்ளக்குறிச்சி பகுதி மக்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிக்கலான இந்த நேரத்தில் திறமையான அதிகாரிகள் கள்ளக்குறிச்சி விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பணி மாறுதலில் செல்வது மாவட்ட மக்களிடம் ஒருவித விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.