தான் பார்வை மாற்றுத்திறனாளியாக இருப்பதால் நல்ல நூல்களைப் படிக்க ஆசைப்பட்ட போதெல்லாம் படிக்க முடியாமல் போனது. ஆனால் அந்த நூல்களைப் படித்தறிய வேண்டும் என்ற வேட்கை மட்டும் குறையவில்லை. பின் நாட்களில் அச்சு நூலை மின்னூலாக மாற்றும் தொழில்நுட்பம் வந்தவுடன் தான் படிக்கும் காலங்களில் படிக்க முடியாமல் விட்ட அத்தனை நூல்களையும் படித்து மகிழ்ந்த சிலட்டூர் அரசுப் பள்ளி தமிழாசிரியர் பொன்.சக்திவேல். தான் படித்தால் மட்டும் போதாது என்றெண்ணி அச்சு புத்தகங்களை மின்னூலாக மாற்றி பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கும் கொடுத்து வருகிறார். வாசிக்கத் துடித்த அத்தனை பேரையும் வாசிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
இதுவரை கலைஞரின் நெஞ்சுக்கு நீதி உள்பட சுமார் 1000 புத்தகங்களை சுமார் 10 லட்சம் பக்கங்களை மின்னூலாக்கி நண்பர்களுக்கும் கொடுத்திருக்கிறார் என்ற அவரது முகநூல் பதிவைப் பார்த்துத் தொடர்ந்து அவரிடமும் சில தகவல்களைப் பெற்று நக்கீரன் இணையத்தில் விரிவான கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்த கட்டுரை தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சகம் வரை சென்று நெகிழ வைத்துள்ளது. மேலும் அவரை பாராட்டவும் செய்துள்ளது.
இது பற்றி பொன்.சக்திவேல் தனது முகநூல் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு இதோ, “தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், பார்வையற்றோருக்கு மின்னூலாக மாற்றித்தரும் எனது பணி பற்றிய செய்தியைப் படித்திருக்கிறார். அவரது அறிவுறுத்தலின்படி, புதுக்கோட்டை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் என் பள்ளிக்கே வந்து என்னைக் கௌரவித்தார். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் காணொளி அழைப்பின் வாயிலாக எனக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
வாசித்துக் காட்ட ஆள் இல்லாமல் கல்லூரி காலங்களில் நான் சிரமப்பட்டுக் கொண்டிருந்த பொழுது, வளர்ந்து வந்த தமிழ் ஓ.சி.ஆர் தொழில்நுட்பம், ஜே.ஆர்.எஃப் தொகையில் வாங்கிய உயர் ரக ஸ்கேனரும் மின்னூலாக்கத்திற்கு உதவி செய்தன. அது என் வாசிப்பிற்கான பாதையைத் திறந்தது. என்னைப்போலவே, அச்சு நூல்களைப் படிக்கச் சிரமப்படும் பார்வை மாற்றுத் திறனாளிகள் அச்சுனூலை வாங்கி அனுப்பி வைத்தால் மின்னூலாக மாற்றித் தருகிறேன் என்று அறிவித்த பொழுது, பல பார்வை மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறும் வாசிப்பு நெடுஞ்சாலையாக அது விரிந்தது. வாசிப்பது எனக்கு மிகவும் பிடித்த செயல் என்பதால் மிகுந்த மகிழ்ச்சியோடு இப்பணியை செய்து வந்தேன். அறிவார்ந்த நண்பர்கள் அரிய நூல்களின் அறிமுகம் என இதன் வாயிலாக நான் பெற்ற பயன்கள் ஏராளம். அதைத் தாண்டி அங்கீகாரத்தை பற்றியெல்லாம் ஒருபோதும் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.
எனது முகநூல் பதிவொன்றைப் பார்த்துவிட்டு புதுக்கோட்டை நிருபர்களான பகத்சிங், சுரேஷ் அதனைச் செய்தியாக வெளியிட எனது மின்னூல் உருவாக்கம் தொடர்பான விவரங்கள் குறித்துக் கேட்டனர். விவரங்களைச் சொல்லும்போது இந்தச் செய்தி பத்தோடு பதினொன்றாகக் கடந்து சென்றுவிடும் என்றுதான் மனதிற்குள் நினைத்தேன். செய்தி வெளியான பிறகு, அதனைப் பார்த்துவிட்டு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொண்டு வாழ்த்தினர். பத்திற்கும் மேற்பட்டோர் எனது என்னைக் கண்டறிந்து தொலைப்பேசியிலும் நேரடியாக அழைத்து வாழ்த்து தெரிவித்திருந்தனர். அனைத்திற்கும் உச்சமாக இது அரசின் கவனத்தையும் எட்டி இருக்கிறது. இவற்றையெல்லாம் எண்ணி இத்தருணத்தில் மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் போயிருக்கிறேன் நண்பர்களே.
கொஞ்சக் காலமாகவே முகநூலைக் கரித்துக்கொட்டிக்கொண்டிருந்தாலும் இத்தகைய நிகழ்வுகள் நடக்கக் காரணமான முகநூலுக்கு இன்று நன்றியைக் கூறிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சி உலக சாதனையாளர்களை உருவாக்கும் சின்னக் கிராமம் என்பதைத் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறது. முதலில் தடகள வீராங்கனை சாந்தி, அடுத்து பொன்.சக்திவேல் ஆசிரியர், அடுத்து இன்னும் பலரை உருவாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.