Skip to main content

தன் வீட்டுக்கு தானே தீ வைத்துக்கொண்டு நடித்தவர் கைது...

Published on 12/10/2020 | Edited on 12/10/2020

 

 

villupuram incident youth arrested

 

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள வெள்ளிமேடுபேட்டையில் உள்ள அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கன்னியப்பனின் மகன் மணிகண்டன் வயது 27. இவர் தந்தை கன்னியப்பன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் மணிகண்டன்  தனது தாய் ஜெயலட்சுமி உடன் சென்னை குன்றத்தூர் பகுதியில் வசித்துவருகிறார். 

 

மேலும், அவர் அப்பகுதியில் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். கரோனா பரவல் காரணமாக மணிகண்டன் சில மாதங்களாக தனது சொந்த ஊரான நடுவனந்தல் கிராமத்திற்கு வந்து தங்கியுள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு மணிகண்டனின் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது மணிகண்டன் வீட்டுக்குள் இருந்து “ஐயோ என்னை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்” என்று கத்தி சத்தம் போட்டுள்ளார். 

 

இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரின் வீட்டின் சுவரை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது வீட்டுக்குள் மணிகண்டன் கட்டிப் போடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அவரது கட்டுக்களை அவிழ்த்து, அவரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதற்கிடையே இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து  வீரர்கள் தீயை அணைத்தனர். 

 

வீட்டில் இருந்த பீரோ உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து போயின. இதுகுறித்து வெள்ளிமேடுபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். அப்போது மணிகண்டன் 4 பேர் கொண்ட கும்பல் தன்னை வீட்டுக்குள் கட்டிப் போட்டுவிட்டு, வீட்டில் இருந்த ரூ.15 லட்சம் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பி போகும்போது வீட்டுக்கு தீவைத்துவிட்டு சென்றதாக கூறியுள்ளார். 

 

இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தபோது மணிகண்டன் மீதே போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்துள்ளனர். அப்போது மணிகண்டன் யாரும் என்னை கட்டிப் போட்டு பணத்தை கொள்ளை அடித்து செல்லவில்லை. வீட்டுக்கும் தீ வைக்கவில்லை எனக்கும் என்னுடைய சித்தப்பா ஏழுமலைக்கும் நிலப்பிரச்சனை தொடர்பாக முன் விரோதம் இருந்து வருகிறது. இதில் ஏழுமலை குடும்பத்தினரை பழிவாங்கும் நோக்கத்தில் தன்னைத்தானே கட்டிப் போட்டுக் கொண்டு தனது வீட்டுக்குத் தானே தீ வைத்து கொண்டு நாடகமாடியதாக மணிகண்டன் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து மணிகண்டன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர். தனக்குத் தானே தீ வைத்துக்கொண்ட மணிகண்டனின் செயலைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

குடிநீர் கிணற்றில் மனித கழிவா? விழுப்புரம் ஆட்சியர் விளக்கம்

Published on 15/05/2024 | Edited on 15/05/2024
as

விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூர் மதுரா கே.ஆர்.பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள குடிநீர் கிணறு ஒன்றில் மனித கழிவு மிதப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மாவட்ட ஆட்சியர் பழனி, இது முற்றிலும் தவறான தகவல் என விளக்கமளித்துள்ளார்.

அதில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர், காணை வட்டார வளர்ச்சி அலுவலர், செயற்பொறியாளர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அடங்கிய குழுவினரை அனுப்பி சம்மந்தப்பட்ட குடிதண்ணீர் கிணற்றைப் பார்வையிட்டனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் செயற்பொறியாளர் கிணற்றில் உள்ள நீரை எடுத்து பரிசோதனை செய்ததில் குடிநீர் முற்றிலும் பாதுகாப்பானது  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிணற்றில் மிதந்த பொருள் ஒரு தேன் அடை என்பதும் கண்டறியப்பட்டது. பின்பு கிராம மக்கள் முன்னிலையில் கிணற்றுக்குள் இருந்து தேன் அடை எடுக்கப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பிற்காக கிணற்றின் மீது இரும்பு கம்பி வேலி அமைக்கவும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார்.